சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கண்டித்து இந்து எழுச்சி முன்னணி நிர்வாகி தீக்குளிக்க முயற்சி

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கண்டித்து தேனியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது இந்து எழுச்சி முன்னணி நிர்வாகி தீக்குளிக்க முயன்றார். அவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-10-05 23:30 GMT

தேனி,

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பை கண்டித்து தேனியில் இந்து எழுச்சி முன்னணி அமைப்பினர் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா தலைமையில் போலீசார் பங்களாமேடு பகுதியில் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இந்து எழுச்சி முன்னணி நகர அமைப்பாளர் முனியாண்டி தலைமையில் சிலர் அங்கு அய்யப்பன் சுவாமி புகைப்படத்துடன் வந்தனர். அந்த புகைப்படத்துக்கு மாலை அணிவித்து பஜனை பாடினர். பின்னர், தீர்ப்பை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.

அப்போது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஒரு வாகனத்தின் பின்னால் இருந்து ஆர்ப்பாட்டம் நடந்த இடத்துக்கு இந்து எழுச்சி முன்னணி தேனி ஒன்றிய தலைவர் அய்யப்பன் வந்து கொண்டு இருந்தார். திடீரென அவர் மறைத்து வைத்து இருந்த மண்எண்ணெய் கேனை திறந்து தனது தலையில் மண்எண்ணெய்யை ஊற்றிக் கொண்டார். தொடர்ந்து சாலையில் நின்று தீக்குளிக்க முயன்ற அவரை போலீசார் மடக்கிப் பிடித்து அவரிடம் இருந்த தீப்பெட்டியை பறித்தனர். பின்னர், அவர் தலையில் போலீசார் தண்ணீர் ஊற்றினர்.

இதையடுத்து தற்கொலைக்கு முயன்றதாக அய்யப்பனை போலீசார் கைது செய்தனர். மேலும், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை அப்பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அனைவரையும் போலீசார் விடுவித்தனர். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்