மாவட்டத்தில் வெள்ளம் பாதிப்பு ஏற்படும் 67 இடங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் வெள்ளம் பாதிப்பு ஏற்படும் 67 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2018-10-05 22:30 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து நேற்றும் காலை முதலே திண்டுக்கல்லில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. மதியம் 1 மணியளவில் சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. பின்னர் விட்டு, விட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

இதேபோல, சாணார்பட்டி, கொடைரோடு, நத்தம், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் ஆகிய இடங்களிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இதனால், ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கியது. பொதுமக்கள் குடை பிடித்தபடியே வெளியே சென்றனர். பழனியை அடுத்த புளியம்பட்டியில் பெய்த மழையால் அங்குள்ள அகதிகள் முகாமை வெள்ளம் சூழ்ந்துள்ளது. முகாமை சுற்றி குளம் போல தண்ணீர் தேங்கியுள்ளதால் அந்த பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில், வருகிற 8–ந்தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், ‘ரெட் அலர்ட்’ விடப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 67 இடங்கள் வெள்ளம் பாதிப்புள்ள பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. இதையொட்டி, பாதிப்புகளை தடுக்க அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆர்.டி.ஓ., தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்களை கொண்ட 6 கமிட்டிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

வெள்ளம் பாதிக்கும் என கண்டறியப்பட்டுள்ள ஒவ்வொரு இடத்தில் இருந்தும் முதல் தகவல் அளிப்பதற்காக தலா 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், தன்னார்வலர்கள், நீச்சல் தெரிந்த பெண்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், அனைத்து அதிகாரிகளும் 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்குமாறும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

வெள்ள பாதிப்புகளை தடுக்க மணல் மூட்டைகளுடன் தயாராக இருக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, நேற்று மாலை காணொலி காட்சி மூலம் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் அதிகாரிகளை தொடர்பு கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக கேட்டறிந்தார். இதில், கலெக்டர் டி.ஜி.வினய் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்