கனமழை அறிவிப்பு: கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பால், பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-10-05 22:45 GMT

கொடைக்கானல்,

‘மலைகளின் இளவரசி’ என்றழைக்கப்படும் கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று பேரிஜம் ஏரி. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த ஏரிக்கு செல்லும் வழியில் தொப்பிதூக்கி பாறை, மதிக்கெட்டான்சோலை, அமைதி பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த பகுதிகளை பார்வையிட தவறுவதில்லை.

இங்கு வனவிலங்குகள் அதிகம் வசிப்பதால் சுற்றுலா பயணிகள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தினமும் 200 வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்படும். மேலும் இந்த பகுதிகளை காண வனத்துறையினரிடம் அனுமதி பெற்றே செல்ல முடியும். இதற்காக குறிப்பிட்ட அளவு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வருகிற 8–ந்தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு நலன் கருதி பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அதன்படி நேற்று முதல் வருகிற 18–ந் தேதி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும். அடுத்த உத்தரவு பிறக்கும் வரை பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளும், வாகன ஓட்டிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்