காஞ்சீபுரம் அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த 1½ டன் குட்கா பறிமுதல் 10 பேர் கைது

காஞ்சீபுரம் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1½ டன் குட்கா போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2018-10-05 22:30 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே துலுக்கான்தாண்டலத்தில் ஒரு குடோனில் மூட்டை மூட்டையாக குட்கா போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில், பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.பிரபாகர் தலைமையில் போலீசார் உடனடியாக அந்த குடோனுக்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது, அந்த குடோனில் 1½ டன் குட்கா போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பாலுச்செட்டிச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காஞ்சீபுரம் பகுதியை சேர்ந்த திருமலை என்கிற திருப்பதி (வயது 41), ஆசாராம் (28), சுஜாராம் (42), விக்னேஷ் ஷா (22), வேலு (38), சுந்தர் (24), திவாகரன் (36), வேலுசாமி (47), பால்ராஜ் (53), முத்துகணேசன் (40) ஆகிய 10 பேரை கைது செய்தனர்.

விசாரணையில், பெங்களூருவில் இருந்து குட்கா போதை பொருட்களை வேன் மூலம் கடத்தி வந்து காஞ்சீபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வியாபாரிகளிடம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த 1½ டன் குட்கா போதை பொருட்கள் மற்றும் அதை கடத்தி வர பயன்படுத்தப்பட்ட 2 மினிவேன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா போதை பொருட்களின் மதிப்பு ரூ.9 லட்சம் என கூறப்படுகிறது.

பின்னர் கைது செய்யப்பட்ட 10 பேரையும் காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 15 பேரும் காஞ்சீபுரம் சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்