குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் கலெக்டர் ஆய்வு

குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேற்று ஆய்வு செய்தார்.

Update: 2018-10-05 23:30 GMT
நித்திரவிளை,

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழை பெய்யும் என்றும், எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் மழை கால முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மேலும் மழை காலத்தில் மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் அதை தெரிவிக்க நித்திரவிளை அருகே சின்னத்துறை, வள்ளவிளை மற்றும் குளச்சல் ஆகிய இடங்களில் மீன்வளத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை புதிதாக திறக்கப்பட்டு உள்ளது. மேலும் கலெக்டர் அலுவலகத்திலும் ஒரு கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்த தகவல் குமரி மாவட்டத்தில் அனைத்து மீனவ கிராமங்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடலில் மீன்பிடிக்க சென்றவர்களுக்கும் தகவல் சென்று சேர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே மீனவ கிராமங்களில் அதிகாரிகள் வீடு, வீடாக சென்று எவ்வளவு மீனவர்கள் கடலுக்கு சென்றிருக்கிறார்கள்? இதுவரை கரை திரும்பாத மீனவர்கள் யார்- யார்? என்ற விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சின்னத்துறை மற்றும் வள்ளவிளை ஆகிய கடற்கரை கிராமங்களில் நடைபெற்று வரும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் அங்கு புதிதாக செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைகளையும் பார்வையிட்டார்.

குமரி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் பெய்த பலத்த மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோர தாழ்வான பகுதிகளான மங்காடு, கோயிக்கத்தோப்பு, பள்ளிக்கல் ஆகிய பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. இந்த நிலையில் தற்போது புயல் காரணமாக மீண்டும் கனமழை பெய்ய இருப்பதால் தாமிரபரணி ஆற்றங்கரையோர தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த தாழ்வான பகுதிகளுக்கும் கலெக்டர் பிரசாந்த் வடநேரே சென்று பார்வையிட்டார். அவருடன் கிராம பஞ்சாயத்து உதவி இயக்குனர் சுலைமான் செய்யது, முன்சிறை வட்டார வளர்ச்சி அலுவலர் டேவிட் ஜெயன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) விஜயன், பத்மநாபபுரம் கோட்டாட்சியர் ராஜகோபால் சுங்கரா, விளவங்கோடு தாசில்தார் கண்ணன், நித்திரவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உடன் சென்றனர்.

மேலும் செய்திகள்