டேன்டீ தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் முறையீடு; ஏ.ஐ.டி.யூ.சி. தலைவர் தகவல்

டேன்டீ தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்கக்கோரி நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது என்று நீலகிரி மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. தலைவர் தெரிவித்தார்.

Update: 2018-10-05 23:00 GMT

கூடலூர்,

இந்தியாவில் இருந்து கூலி வேலைக்காக இலங்கைக்கு சென்று அங்கேயே வசித்து வந்த தமிழர்கள் கடந்த 1964–ம் ஆண்டு மீண்டும் தாயகம் திரும்பினர். அப்போது அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் 1969–ம் ஆண்டு தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம்(டேன்டீ) உருவாக்கப்பட்டது. டேன்டீ தேயிலை தோட்டங்களில் தாயகம் திரும்பிய மக்களின் குடும்பத்தில் 2 பேருக்கு வேலை வழங்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த காலக்கட்டங்களில் தாயகம் திரும்பிய மக்களுக்கு போதிய முன்னுரிமை அளிக்கப்படவில்லை.

இதனால் தேயிலை தோட்டங்களில் குறைந்தளவு வருமானத்தில் அவர்கள் வாழ்க்கையை கழித்து வருகின்றனர். மேலும் பணி ஓய்வு பெற்ற பிறகு டேன்டீ குடியிருப்புகளை காலி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் தங்களது வயதான காலத்தில் குடியிருக்க வீடு இல்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே அரசு தேயிலை தோட்டங்களில் பணியாற்றி வரும் தாயகம் திரும்பிய மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்று மறுவாழ்வு துறை நிர்வாக இயக்குனரகத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் கோரிக்கை விடப்பட்டது.

இந்த கோரிக்கை குறித்து தமிழக அரசின் கவனத்துக்கு மறுவாழ்வு நிர்வாக இயக்குனரகம் கொண்டு சென்றது. மேலும் சென்னை ஐகோர்ட்டில் தாயகம் திரும்பிய மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு வருகிற 8–ந் தேதி தமிழக அரசு மற்றும் மறுவாழ்வுத்துறை நிர்வாக இயக்குனரகம், மாவட்ட கலெக்டர் ஆகியோர் விளக்கம் அளிக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் டி.பாலகிருஷ்ணன் கூறியதாவது:–

கடந்த 1969–ம் ஆண்டு இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களுக்கு சேரங்கோடு, சேரம்பாடி, நெல்லியாளம், தேவாலா, பாண்டியாறு, குன்னூர், கோத்தகிரி ஆகிய இடங்களில் அரசு தேயிலை தோட்டங்கள் உருவாக்கப்பட்டு 2,500 குடும்பங்களுக்கு வேலை வழங்கப்பட்டது. மேலும் தோட்ட தொழில் சட்டப்படி அவர்கள் பணிக்காலத்தில் தங்கி இருக்க குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 60 வயதை பூர்த்தி அடைந்தவுடன் பணி ஓய்வு அளிக்கப்படுகிறது.

அதன்பின்னர் டேன்டீ குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என்று டேன்டீ நிர்வாகம் பணி ஓய்வு பெற்ற தாயகம் திரும்பிய மக்களை வற்புறுத்துகிறது. இதனால் குடியிருப்புகளை விட்டு வெளியேறும் அவர்கள் வயதான காலத்தில் வீடு இல்லாமல் கடும் இன்னல்களை சந்திக்கின்றனர். எனவே கடந்த 1964–ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்தியா– இலங்கை ஒப்பந்தப்படி தாயகம் திரும்பிய மக்கள் 2,500 பேருக்கு வீடுகள் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மறுவாழ்வுத்துறைக்கு கோரிக்கை விடப்பட்டது.

அதன்படி 2018–2019–ம் ஆண்டுக்கான பொதுத்துறை மானிய கோரிக்கையின்போது தமிழகம் முழுவதும் உள்ள தாயகம் திரும்பிய மக்களுக்கு 10 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று தமிழக முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். ஆனால் அரசு தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் தாயகம் திரும்பிய மக்கள் குறித்து தெளிவான அறிவிப்பு இல்லை. எனவே டேன்டீயில் பணியாற்றும் தாயகம் திரும்பிய மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்க அரசுக்கு உத்தர விட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் முறையீட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்