ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல்: பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரித்தால் தான் உண்மை வெளிவரும் - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பேச்சு

ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரித்தால் தான் உண்மை வெளிவரும் என்று கோவையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் பேசினார்.

Update: 2018-10-05 23:30 GMT

கோவை,

கோவை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் ஆவாரம்பாளையத்தில் உள்ள சி.எம்.திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. இதற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார், வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன், தெற்கு மாவட்ட தலைவர் எம்.பி.சக்திவேல், மாநில மகிளா காங்கிரஸ் தலைவி ஜான்சிராணி, ஆர்.எம்.பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள்.

கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சஞ்சய் தத் தலைமை தாங்கி பேசியதாவது:–

பாரதீய ஜனதா ஆட்சியில் ஊழலே நடக்க வில்லை என்று தம்பட்டம் அடித்து வந்த பிரதமர் நரேந்திரமோடி ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார். நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள இந்த ஊழலை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டர்களின் கடமை.

இதற்காக வீடு தோறும் மக்களை சந்தித்து மோடியின் ஊழல்களையும், அரசு நிர்வாகத்தின் எல்லா நிலைகளும் செயல்இழந்து வருவதையும் எடுத்துச் சொல்ல வேண்டும். மேலும் ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரித்தால் தான் உண்மை வெளிவரும். எனவே அதற்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக பதவி ஏற்க செய்ய காங்கிரஸ் தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும். காங்கிரஸ் கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் அந்தந்த பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் நடவடிக் கை எடுக்க வேண்டும். மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பூத் முகவர்கள் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், கோவை மாநகராட்சி நிர்வாகம் பிரான்ஸ் நாட்டு சூயஸ் நிறுவனத்திற்கு அளித்த 26 ஆண்டு கால குடிநீர் வினியோக உரிமையை மாநில அரசு ரத்து செய்ய வேண்டும். பொள்ளாச்சி நகராட்சியில் நிறைவேற்றப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்