அ.தி.மு.க.விற்கு தேர்தல் பயம் கிடையாது அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

அ.தி.மு.க.விற்கு தேர்தல் பயம் கிடையாது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்து உள்ளார்.

Update: 2018-10-05 21:30 GMT

தூத்துக்குடி,

அ.தி.மு.க.விற்கு தேர்தல் பயம் கிடையாது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;–

தினகரனுடன்...

தமிழக துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்தித்ததாக டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இதுகுறித்து செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசும் போது துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெளிவாக கூறியுள்ளார். ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக தான் பிரிந்தவர்கள் இணைந்தோம். இந்த ஆட்சி 2021 வரை தொடர வேண்டும். அதற்காக எந்த தியாகத்தை செய்ய தயாராக உள்ளேன். இந்த ஆட்சிக்கு எதிராக இருப்பவர்களை ஏற்று கொள்ள மாட்டேன் என்று பேசியுள்ளார். 2017–ம் ஆண்டு கால கட்டத்தில் டி.டி.வி. தினகரன் எங்களுடன் இருந்தார். அப்போது ஏற்பட்ட சந்திப்பை அவர் தவறாக சொல்லி இருக்கலாம்.

தேர்தல் பயம் கிடையாது

அ.தி.மு.க. பெரிய இயக்கம். இதில் இருந்து பிரிந்து சென்று தனி அமைப்பை உருவாக்கியவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். பிரிந்து சென்றவர்கள் அவர்களாக வந்து இணைந்ததாக தான் வரலாறு உள்ளது. எனவே அ.ம.மு.க.வினர் அ.தி.மு.க.வில் இணைந்தால் அது அவர்களின் முடிவை பொறுத்தது.

அ.தி.மு.க.விற்கு தேர்தல் பயம் கிடையாது. பயத்தை எதிரிகளுக்கு கொடுத்து தான் பழக்கம். வருகிற இடைத்தேர்தலில் திருப்பரங்குன்றமும், திருவாரூரும் அ.தி.மு.க.விற்கு பெரிய அரசியல் எதிர்காலத்தை உருவாக்கி தரும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அ.தி.மு.க.வில் எந்த அணியும் கிடையாது. நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்