நெல்லை– தென்காசியில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நெல்லை, தென்காசியில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2018-10-05 21:30 GMT

நெல்லை,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நெல்லை, தென்காசியில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை அதிக அளவில் உயர்த்தி வரும் மத்திய–மாநில அரசுகளை கண்டித்து, தமிழகம் முழுவதும் நேற்று பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதே போல் நெல்லை மாநகர் மாவட்டத்தின் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சீயோன் தங்கராஜ் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் பிச்சையா, துணை பொதுச்செயலாளர் அன்பழகன், முன்னாள் மாவட்ட செயலாளர் நயினார்சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொதுச்செயலாளர் திருமலைக்குமாரசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினார்.

சரக்கு சேவை வரி

அவர் பேசுகையில், மத்திய அரசு தினம், தினம் பெட்ரோல்– டீசல் விலையை உயர்த்தி வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். மத்திய–மாநில அரசு கச்சாபொருட்களின் விற்பனையில் போடுகின்ற வரியை குறைத்தால் போதும். எல்லா பொருட்களையும் சரக்கு சேவை வரியின் கீழ் கொண்டு வந்து உள்ள அரசு, பெட்ரோல், டீசலையும் சரக்கு சேவை வரிக்குள் கொண்டு வந்தால் விலை குறைந்து விடும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில மாணவர் அணி செயலாளர் எட்வின் நம்புடையார், முன்னாள் துணை பொதுச்செயலாளர் நிஸ்தார் அலி, தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜெபக்குமார், இளைஞர் அணி துணை தலைவர் அந்தோணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி

தென்காசி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில துணை பொது செயலாளர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் சேது அரிகரன், மாவட்ட செயலாளர்கள் அனந்த பாபு உள்பட பலர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதில் மாநில துணை தலைவர் அய்யம் பெருமாள், மாவட்ட துணை தலைவர் ராயப்பன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்