புதுவைக்கு ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பு இல்லை: பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் உள்ளாட்சி துறை அதிகாரி பேட்டி

புதுவைக்கு ரெட் ‘அலர்ட்’ அறிவிப்பு இல்லை. எனவே பொதுமக்கள் அச்சப்படவேண்டாம் என்று உள்ளாட்சி துறை செயலாளர் ஜவகர் கூறினார்.

Update: 2018-10-04 23:52 GMT
புதுச்சேரி,

புதுவையில் கனமழை பெய்தால் மீட்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று கவர்னர் மாளிகையில் நடந்தது. கூட்டத்திற்கு கவர்னர் கிரண்பெடி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அரசுத்துறை செயலாளர்கள் ஜவகர், பார்த்தீபன், மாவட்ட கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முடிவில் உள்ளாட்சி துறை செயலாளர் ஜவகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவை மாநிலத்தில் இன்று முதல் வருகிற 8-ந் தேதி வரை கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக 7-ந் தேதி மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுவைக்கு ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.

உள்ளாட்சி துறை, பொதுப்பணித்துறை, மின்துறை மற்றும் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரிடர் மீட்பு மையத்திலும் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் பகுதியில் மழை தொடர்பாக ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக 1077, 1070 என்ற இலவச எண்களை தொடர்பு கொள்ளலாம். அதிகாரிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பார்கள்.

புதுவையில் கனமழை பெய்தால் மீட்பு பணியில் ஈடுபட அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளது. பாதுகாப்பு மையங்கள் அமைக்க 700 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளது. எனவே கனமழையால் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பாதுகாப்பு மையங்களில் சென்று தங்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்