மைசூரு அரண்மனையில் தங்க சிம்மாசனம் ஜோடிக்கப்பட்டது

மைசூரு அரண்மனையில் தங்க சிம்மாசனம் நேற்று ஜோடிக்கப்பட்டது. அந்த சிம்மாசனத்தில் அமர்ந்து 10-ந்தேதி முதல், இளவரசர் யதுவீர் தர்பார் நடத்துகிறார்.

Update: 2018-10-04 23:50 GMT
மைசூரு,

உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா விழா வருகிற 10-ந்தேதி சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தி, மலர் தூவி தொடங்கப்படுகிறது. 19-ந்தேதி வரை தசரா விழா நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவின் இறுதிநாளில் சிகர நிகழ்ச்சியாக ஜம்புசவாரி ஊர்வலம் நடக்கிறது.

தசரா விழா தொடங்கும் நாள் முதல் இறுதி நாள் வரை 10 நாட்களும் மைசூரு மன்னர் அரண்மனையில் உள்ள தர்பார் மண்டபத்தில் அலங்கரிக்கப்படும் தங்க சிம்மாசனத்தில் இருந்து தர்பார் நடத்துவார். மேலும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வார். தசரா விழா நிறைவடைந்ததும் சிம்மாசனம் 8 பாகங்களாக பிரித்து அரண்மனையின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு விடுவது வழக்கம்.

அதுபோல் இந்த ஆண்டு தசரா விழாவையொட்டி இளவரசர் யதுவீர் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து தர்பார் நடத்த உள்ளார். தசரா விழா தொடங்க இன்னும் 4 நாட்களே இருப்பதால், தர்பார் நடத்த ஏதுவாக தங்க சிம்மாசனம் ஜோடிக்கும் பணி நேற்று நடந்தது.

இதற்காக பாதுகாப்பு அறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் தங்க சிம்மாசனத்தின் 8 பாகங்களும் எடுத்துவரப்பட்டன. பின்னர் சிறப்பு பூஜை நடத்தி தங்க சிம்மாசனம் ஜோடிக்கும் பணி தொடங்கியது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த பணி மதியம் 1 மணி வரை நடந்தது. இந்த பணியில் மைசூரு அருகே கெஜ்ஜஹள்ளி கிராமத்தை சேர்ந்த 6 நிபுணர்கள் சிம்மாசனத்தை ஜோடித்தனர்.

இந்த பணியை மகாராணி பிரமோதா தேவி, கலெக்டர் அபிராம் ஜி.சங்கர் ஆகியோர் மேற்பார்வையிட்டனர். தங்க சிம்மாசனம் ஜோடிக்கப்பட்டதை தொடர்ந்து, அதன் மீது வெள்ளை நிற துணி போட்டு மூடப்பட்டது.

மேலும் தங்க சிம்மாசனத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 10-ந்தேதி வெள்ளை துணி நீக்கப்பட்டு தங்க சிம்மாசனத்திற்கு சிறப்பு பூஜை நடத்தப்படும். அதன் பிறகு அதில் அமர்ந்து இளவரசர் யதுவீர் தர்பார் நடத்துவார். இந்த தர்பார் நிகழ்ச்சி 19-ந்தேதி வரை 10 நாட்களும் நடக்கிறது.

மேலும் செய்திகள்