மும்பை விமான நிலையத்தில் 23-ந் தேதி பராமரிப்பு பணி

மும்பை விமான நிலையத்தில் வருகிற 23-ந் தேதி பராமரிப்பு பணி நடக்கிறது. இதன் காரணமாக 300 விமான சேவைகள் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2018-10-04 23:32 GMT
மும்பை,

மும்பை விமான நிலையம் டெல்லியை அடுத்து பரபரப்பாக காணப்படும் நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிலையம் ஆகும். அங்கு தினசரி 970 விமானங்கள் வந்து செல்கின்றன. மெயின் ஓடுதளத்தில் மணிக்கு 48 விமானங்களும், செகண்டரி ஓடுபாதையில் 35 விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு மழைக்காலத்தின் போது, அக்டோபர் மாதம் மெயின் ஓடுபாதைகுண்டும், குழியுமாக கிடந்ததால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

இதையடுத்து இந்த ஆண்டு மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பருவமழைக்கு முன்னரும், பின்னரும் விமான நிலைய ஓடுபாதைகள் பராமரிக்கப்படும் என மும்பை சர்வதேச விமான நிலைய நிறுவனம் (எம்.ஐ.ஏ.எல்.) தெரிவித்து இருந்தது.

இதன்படி பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக விமான நிலைய ஓடுபாதையில் பராமரிப்பு பணிகள் நடந்தன. பருவமழைக்கு பின் வருகிற 23-ந் தேதி விமான நிலைய ஓடுபாதையில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கின்றன.

பின்னர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந் தேதி முதல் மார்ச் 30-ந் தேதி வரை (மார்ச் 21-ந் தேதி தவிர) செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் பராமரிப்பு பணி நடக்கிறது.

விமான நிலையத்தில் நடைபெறும் இந்த பராமரிப்பு பணி காரணமாக ஒரு நாளைக்கு 300 விமான சேவைகள் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்