சேலம் மாவட்டத்தில் பலத்த மழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சேலம் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.;

Update: 2018-10-04 22:00 GMT
சேலம், 


தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இந்த மழை விடிய, விடிய நீடித்தது. சேலம் மாநகரை பொறுத்தவரையில் அஸ்தம்பட்டி, அழகாபுரம், மணக்காடு, சூரமங்கலம், அன்னதானப்பட்டி, கிச்சிப்பாளையம், கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, பழைய மற்றும் புதிய பஸ்நிலையம், கன்னங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று காலையிலும் மழை நிற்காமல் பெய்து கொண்டே இருந்ததால், பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று காலை 8 மணிக்கு மேலும் மழை பெய்து கொண்டிருந்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுமா? அல்லது வழக்கம்போல் செயல்படுமா? என்று மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் மத்தியில் ஒருவித குழப்பம் நிலவியது.

இதையடுத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளை சிலர் செல்போனில் தொடர்பு கொண்டு பள்ளி விடுமுறையா? என்று கேட்டனர். தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட கலெக்டர் ரோகிணி அறிவித்தார். இந்த தகவல் கல்வித்துறை அதிகாரிகள் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க, விடுமுறை பற்றி தகவல் தெரியாத மாணவ-மாணவிகள் வழக்கம்போல் தங்களது பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு சென்றபிறகு தான் பள்ளிக்கு விடுமுறை என்ற விவரம் தெரியவந்ததால், அவர்கள் மழையில் நனைந்தபடி வீடுகளுக்கு புறப்பட்டு சென்றதை காணமுடிந்தது. ஆனால் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. இதனால் கல்லூரி மாணவ -மாணவிகள் வழக்கம்போல் கல்லூரிகளுக்கு சென்றனர்.

மார்க்கெட்டில் மழைநீர் தேங்கியது

அதேபோல், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் நபர்கள் மழையில் நனைந்தவாறு கடும் சிரமத்திற்கு இடையே சென்றனர். சேலத்தில் நேற்று பகலில் இடை விடாமல் சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். பொதுமக்கள் சிலர் குடைகளை பிடித்தவாறு வெளியே சென்று வந்தனர். சேலம் அருகே அரியானூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் அதிகளவில் தேங்கி நின்றதால் வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்து சென்றதை காணமுடிந்தது.

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் அதிகளவில் மழைநீர் தேங்கி நின்றதாலும், சேறும், சகதியுமாக காட்சியளித்ததாலும் வழக்கமாக நடைபயிற்சிக்கு வரும் பொதுமக்கள் நேற்று நடைபயிற்சிக்கு வரவில்லை. சேலம் திருமணிமுத்தாறு ஆற்றோரம் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டில் மழைநீர் அதிகளவில் தேங்கி நின்றது. இதனால் காய்கறி வியாபாரம் பாதிக்கப்பட்டதால் வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

சேலத்தில் பெய்த பலத்த மழையால் சாலையிலும், தாழ்வான பகுதியிலும் மழைநீர் தேங்கி நின்றது. இந்த தொடர் மழையினால் மாவட்டத்தில் பெரியஅளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மாவட்டத்தில் வீரகனூர், ஆத்தூர், ஏற்காடு, பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகளவில் மழை பெய்துள்ளது.

இளம்பிள்ளை, மகுடஞ்சாவடி, சின்னப்பம்பட்டி, இடங்கணசாலை, சித்தர்கோவில், எட்டிகுட்டைமேடு, தெசவிளக்கு, மாட்டையாம்பட்டி, கசப்பேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.
ஒருசில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் ஆங்காங்கே வயல்களில் மழைநீர் தேங்கி நின்றது. நேற்றும் அதிகாலை முதலே இளம்பிள்ளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.

சேலம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-

வீரகனூர்-30, ஆத்தூர்-23.6, ஏற்காடு-23.4, கரியகோவில்-21, பெத்தநாயக்கன்பாளையம்-20, கெங்கவல்லி-19.2, ஆனைமடுவு-18, சேலம்-17, காடையாம்பட்டி-16, வாழப்பாடி-14, தம்மம்பட்டி-11.6, எடப்பாடி-8, சங்ககிரி-5.6, ஓமலூர்-2.6. மாவட்டத்தில் சராசரி மழை அளவு 12.3 மி.மீ. ஆகும். 

மேலும் செய்திகள்