ஆட்டுப்பாக்கத்தில் ஊராட்சி செயலாளரை மாற்றக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

ஆட்டுப்பாக்கத்தில் ஊராட்சி செயலாளரை மாற்றக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-10-04 22:15 GMT
பனப்பாக்கம்,

நெமிலி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது ஆட்டுப்பாக்கம் ஊராட்சி. இங்கு ஊராட்சி செயலாளராக வேலை செய்பவர் செல்வம். இவர் இதே ஊராட்சியில் குடிநீர் தொட்டி ஆபரேட்டராக வேலை செய்யும் கிருஷ்ணன் என்பவருக்கு சரியாக சம்பளம் தரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் செல்வம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக கூறி, அவரை மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமார், ரவி ஆகியோரிடம் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை ஆட்டுப்பாக்கம் ரெயில்வே கேட் அருகே உள்ள அரக்கோணம்- காஞ்சீபுரம் செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த நெமிலி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து அரக்கோணம் தாசில்தார் பாபு, நெமிலி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குமார் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், ஊராட்சி செயலாளர் செல்வம் 100 நாள் வேலை திட்டத்தில் அடையாள அட்டையை பணம் பெற்றுக்கொண்டு வழங்குவதாகவும், தொகுப்பு வீடுகள் ஒதுக்குவதற்கு பணம் பெறுவதாகவும், பணம் பெற்றுக்கொண்டு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் புகார் கூறினர். மேலும் உடனடியாக அவரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அதைத்தொடர்ந்து அதிகாரிகள், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் அரக்கோணம்- காஞ்சீபுரம் செல்லும் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் ஆட்டுப்பாக்கம் ரெயில்வே கேட் பகுதியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

மேலும் செய்திகள்