பிரபல ரவுடி சி.டி. மணி கோட்டூர்புரம் கொலை வழக்கில் கைது

வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி சி.டி.மணியை கோட்டூர்புரம் கொலை வழக்கில் நேற்று போலீசார் ஜெயிலுக்கு சென்று கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் ஜெயிலில் மீண்டும் அடைக்கப்பட்டார்.

Update: 2018-10-04 22:45 GMT
அடையாறு,

சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் சி.டி மணி (வயது 43). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை, ஆள் கடத்தல், மிரட்டல் என சுமார் 28 வழக்குகள் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, எம்.ஜி.ஆர்.நகர், கோட்டூர்புரம், பள்ளிக்கரணை, அடையாறு, மாம்பலம், கே.கே.நகர், பாண்டிபஜார், குமரன்நகர் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களிலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பல வழக்குகளில் ஜாமீனில் வெளியேவந்த இவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் போலீசில் சிக்காமல் இருந்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் முட்டுக்காடு அருகே போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

பின்னர் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சி.டி.மணி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு கோட்டூர்புரம் பாலம் அருகே சி.டி.மணி மற்றும் அவனது கூட்டாளிகள் 8 பேர் சேர்ந்து கார்த்திக் என்பவரை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவானதால் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது.

இதையடுத்து இந்த வழக்கில் ரவுடி சி.டி. மணியை கைது செய்ய மயிலாப்பூர் துணை கமிஷனர் மயில்வாகணன் உத்தரவிட்டதை தொடர்ந்து, கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுதர்சன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான போலீசார் வேலூர் சிறையில் இருந்த சி.டி.மணியை கைது செய்து சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் சி.டி.மணியை போலீசார் மீண்டும் வேலூர் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்