ரூ.35 லட்சம் அழகு சாதன பொருட்களுடன் கன்டெய்னர் கடத்தல் மும்பை வாலிபர் கைது

போலி ரசீது கொடுத்து ரூ.35 லட்சம் மதிப்புள்ள அழகு சாதன பொருட்களுடன் கன்டெய்னரை கடத்திய மும்பை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-10-04 23:00 GMT
பூந்தமல்லி,

சென்னை துறைமுகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து கப்பலில் வரும் கன்டெய்னர்கள் சென்னை மதுரவாயலை அடுத்த வேலப்பன்சாவடி நூம்பல் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கன்டெய்னர் குடோனில் இருப்பு வைக்கப்படும்.

சுங்க இலாகாவுக்கு செலுத்தவேண்டிய தொகையை செலுத்திய அதற்கான ரசீது மற்றும் குடோனில் கன்டெய்னரை வைத்து இருந்ததற்கான வாடகை பணத்தை கொடுத்த உடன் அதன் உரிமையாளர்களிடம் கன்டெய்னர் ஒப்படைக்கப்படும்.

இந்த குடோனின் மேலாளராக சுப்பாராவ் (வயது 49) பணியாற்றி வருகிறார். இவர் ஆகஸ்டு மாதம் மதுரவாயல் போலீசில் புகார் அளித்து இருந்தார்.

அதில், மர்மநபர் ஒருவர் கன்டெய்னர் குடோனில் போலி ரசீதை கொடுத்து ரூ.35 லட்சம் மதிப்பிலான அழகு சாதன பொருட்கள் இருந்த கன்டெய்னரை கடத்திச்சென்று விட்டதாக கூறி இருந்தார்.

இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடோனில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது போலி ரசீது கொடுத்து கன்டெய்னரை கடத்திச்சென்றது மும்பையை சேர்ந்த அனில்சம்பூராம் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் மும்பை சென்று அனில்சம்பூராமை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரித்தனர்.

அனில்சம்பூராம், ஏற்கனவே இதுபோல் கன்டெய்னர் குடோனில் வேலை செய்து வந்துள்ளார். இதனால் அவருக்கு குடோனில் இருந்து கன்டெய்னர்களை எப்படி வெளியே கொண்டு வரவேண்டும் என்பது நன்கு தெரிந்து உள்ளது.

சம்பவத்தன்று லாரி ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு நூம்பல் வந்த அனில்சம்பூராம், அதிகாலை வேலையில் குடோனுக்கு சென்று சுங்க இலாகாவுக்கு பணம் செலுத்தியது போன்று போலியாக தயாரிக்கப்பட்ட ரசீது மற்றும் கன்டெய்னருக்கான வாடகையை கொடுத்துவிட்டு ரூ.35 லட்சம் மதிப்புள்ள அழகு சாதன பொருட்களுடன் இருந்த கன்டெய்னரை லாரியில் ஏற்றி கடத்திச்சென்றார்.

அந்த லாரியை மணலியில் நிறுத்திவிட்டு, அதில் இருந்த கன்டெய்னரை மட்டும் மற்றொரு லாரியில் ஏற்றிச்சென்று, அழகு சாதன பொருட்களை விற்பனை செய்து அந்த பணத்தில் சொகுசாக வாழ்ந்து வந்தது நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அனில்சம்பூராமை போலீசார் சிறையில் அடைத்தனர். அவர் கடத்திச்சென்று விற்ற கன்டெய்னரை மீட்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்