அதிராம்பட்டினத்தில் கடல் சீற்றம்: நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

அதிராம்பட்டினத்தில் நேற்று கடல் சீற்றமாக காணப்பட்டது. இதன் காரணமாக நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.;

Update: 2018-10-04 22:15 GMT
அதிராம்பட்டினம்,

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்தது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த அவதிப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மழை பெய்ய தொடங்கியது.

மிதமாக பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல, பலத்த மழையாக பெய்தது. நேற்று அதிகாலை வரை விடிய, விடிய மழை நீடித்தது. அதே நேரத்தில் கடல் சீற்றமும் இருந்தது. இதன் காரணமாக அதிராம்பட்டினம் கரையூர் தெரு, காந்திநகர், ஆறுமுககிட்டங்கி தெரு, தரகர் தெரு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த நாட்டுப்படகு எனப்படும் சிறிய வகை பைபர் படகுகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் ஆயிரம் பேர் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கடல் முகத்துவார பகுதியில் 200-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:-

கரை பகுதியில் பெய்த மழையை விட கடல் பகுதியில் மழை அதிகமாக இருந்தது. இதனால் கடலுக்குள் படகுகளை எடுத்து செல்வதில் சிரமம் ஏற்படும் என்பதாலும், கடல் சீற்றமாக இருந்ததாலும் மீன்பிடிக்க செல்லவில்லை.

இவ்வாறு மீனவர்கள் கூறினர்.

டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் நேற்று அதிராம்பட்டினத்தில் நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்