லஞ்சம் வாங்குகிறவர்கள் பெயரை சொல்ல நடிகர் விஜய் தயாரா? பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

லஞ்சம் வாங்குகிறவர்கள் பெயரை சொல்ல நடிகர் விஜய் தயாரா? என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2018-10-04 23:15 GMT
திருச்சி,

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டம் தேவையற்றது. தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்ற எந்த திட்டங்களை பற்றியும் பேசுவதற்கே அருகதை கிடையாது. நம்மிடம் கிடைக்க கூடிய இயற்கை வளங்களை நாம் எடுக்காமல் அயல்நாடுகளில் வாங்க வேண்டும் என்றால் காங்கிரசும், தி.மு.க.வும் அயல்நாடுகளின் கைக்கூலிகளாக, ஏஜெண்டுகளாக செயல்படுகிறார்களா?. மக்களை அச்சுறுத்துவது, மிகப்பெரிய இழப்பு ஏற்படுவது போல் தோற்றத்தை உருவாக்குவது போன்ற கேவலமான அரசியலில் இருந்து காங்கிரசும், தி.மு.க.வும் விடுதலை பெற வேண்டும்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்பவர்கள் எந்தந்த மாநிலங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அங்கு விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளதா? என நேரில் சென்று பார்த்து விட்டு வந்து போராட்டம் நடத்த வேண்டும். விவசாயிகள் கடலிலா விவசாயம் செய்கிறார்கள். வாட்ஸ்-அப்பில் வருகிற தகவல்களை எல்லாம் வைத்து கொண்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்கக்கூடாது.

நடிகர் விஜய் தான் முதல்-அமைச்சரானால் நடிக்கமாட்டேன் என்று கூறுகிறார். எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது. ஜெயலலிதா ஆக முடியாது. மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற நடிகராக இருக்கும் ஒரே நபர் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் அவர் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்படுகிறாரா? என்பது தெரியாது. ரஜினி இன்னும் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை. ஆனால் அவர் மக்களிடம் நல்ல மனிதர் என்ற பெயரை எடுத்து இருக்கிறார். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதில் தவறே கிடையாது. நடிகர்கள் மட்டுமல்ல, பத்திரிகை துறையை சார்ந்தவர்களும் அரசியலுக்கு வரலாம்.

நடிகர் விஜய் முழுமையாக அரசியலுக்கு வரட்டும். ஆனால் தமிழகம் புறம்போக்கு நிலம் போல் நாதியில்லாமல் கிடப்பது போன்ற சிந்தனையுடன் உள்ளே வரக்கூடாது. இங்குள்ள எல்லோரும் மோசமானவர்கள், லஞ்சம் வாங்குபவர்கள் என்று பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது. தமிழ்நாட்டில் யார், யாரெல்லாம் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று பெயரை குறிப்பிட்டு சொல்லட்டும். அப்போது நானே முதல் ஆளாக சென்று அவருக்கு மாலை அணிவிக்கிறேன். லஞ்சம் வாங்குகிறவர்கள் பெயரை சொல்ல அவர் தயாரா?.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்