கர்ப்பிணி மனைவியை கொன்று புதைத்த தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை
கர்ப்பிணி மனைவியை கொன்று புதைத்த தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டில் நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது.
நெல்லை,
பாளையங்கோட்டை சிவந்திப்பட்டி அருகே உள்ள ஆலங்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மாடசாமி (வயது 30), கட்டிட தொழிலாளி. இவருடன் மூலைக்கரைப்பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் தங்கரேவதி (23) கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.
அப்போது 2 பேருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து மாடசாமி, தங்கரேவதியை ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகர் பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்தனர்.
இவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு இருந்தது. இந்த நிலையில் தங்கரேவதி தங்களது திருமணத்தை ஊரறிய அறிவித்து, தன்னுடன் முறையாக குடும்பம் நடத்துமாறு மாடசாமியிடம் வலியுறுத்தி வந்தார். ஆனால் மாடசாமி இதற்கு சம்மதிக்கவில்லை. எனவே, தங்கரேவதியை கொலை செய்ய மாடசாமி திட்டமிட்டார்.
கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ந் தேதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தங்கரேவதியை பிரசவத்துக்காக ஆஸ்பத்திரிக்கு செல்லலாம் என்று கூறி வீட்டில் இருந்து மாடசாமி அழைத்து சென்றார். அவரை சிவந்திப்பட்டி பகுதியில் உள்ள ஒரு மலைப்பகுதிக்கு அழைத்து சென்று, வெட்டிக் கொலை செய்தார். பின்னர் தங்கரேவதி உடலை மலைப்பகுதியில் புதைத்து விட்டார்.
இதுகுறித்து சிவந்திப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி ராஜசேகர் வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில், மாடசாமிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இரட்டை ஆயுள் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து மாடசாமியை போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு வக்கீலாக சிவலிங்கமுத்து வாதாடினார்.