தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் திருக்குறள் மையம் புதிதாக பதவி ஏற்ற துணைவேந்தர் பேட்டி

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் திருக்குறள் மையம் ஏற்படுத்தப்படும் என்று புதிதாக பதவி ஏற்ற துணைவேந்தர் கூறினார்.

Update: 2018-10-04 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து புதிய துணைவேந்தராக ஆந்திர மாநிலம் குப்பத்தில் உள்ள திராவிடன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்த கோ.பாலசுப்பிரமணியன் (வயது 57) நியமிக்கப் பட்டார். அவர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.

முன்னதாக பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை, எம்.ஜி.ஆர். சிலைக்கு அவர் மாலை அணிவித்தார். மேலும் தமிழ்த்தாய் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 1959-ம் ஆண்டு பிறந்த இவர் தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகள் கற்றுள்ளார். புதிதாக பதவி ஏற்ற துணைவேந்தர் பாலசுப்பிரமணியன், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கோட்டூரை அடுத்த காட்டுவாக்குடியை சேர்ந்தவர் ஆவார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

பின்னர் துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்ப்பல்கலைக்கழகத்துக்கு தேசிய தர நிர்ணயக்குழுவினர் வருகிற 10, 11, 12 ஆகிய தேதிகளில் வந்து ஆய்வு செய்ய உள்ளனர். எனவே அக்குழுவுக்கு இணையவழி மூலம் தரவுகள் அனுப்பப்பட்டுள்ளன. இதில் அதிக மதிப்பெண்களை பெற முயற்சிப்போம். தமிழ்ப்பல்கலைக்கழகத்துக்கு ஏற்கனவே 2007-ம் ஆண்டு ‘பி பிளஸ்பிளஸ்’ தரம் கிடைத்தது. இப்போது ‘ஏ’ தரம் கிடைக்கும் என நம்புகிறோம்.

இந்த பல்கலைக்கழத்துக்கு தமிழக அரசு 10 திட்டங்களுக்கு ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் கரிகால்சோழன் கலையரங்கம் சீரமைப்பு, யோகா மையம், சிற்பக்கலை பயிற்சி கூடம், சுற்றுச்சுவர் போன்றவை அமைக்கப்படும். தமிழ்வளர் மையம், தமிழ் பண்பாட்டு மையம் முழு வீச்சில் செயல்படுத்தப்படும். இங்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

தமிழ் அமைப்பில் புதுமை ஏற்படுத்தும் விதமாக தமிழ்த்தரவகம் உருவாக்கப்படும். இதே போல கி.பி.12-ம் நூற்றாண்டுக்கு பிறகான தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வெளியீடுகளில் தேவையான அளவுக்கு மறுபதிப்பு செய்யப்படும். பிற திராவிட மொழிகளில் உள்ள சிறந்த நூல்கள் தமிழில் வெளியிடப்படும்.

மேலும் ஒப்பாய்வு செய்வதற்கு ஏற்ப கன்னடம், தெலுங்கு, மலையாளம், சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளுக்கு துறை அல்லது இருக்கை ஏற்படுத்தப்படும். சென்னை அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ளது போல் தமிழ்ப்பல்கலைக்கழகத்திலும் திருக்குறள் மையம் அமைக்கப்படும். தமிழாய்வுக்கு முதலிடமாக இந்த பல்கலைக்கழகத்தை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக துணைவேந்தராக பதவி ஏற்ற பாலசுப்பிரமணியனுக்கு, பதிவாளர் முத்துக்குமார் மற்றும் பேராசிரியர்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்