விழுப்புரம் மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை

விழுப்புரம் மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக திண்டிவனத்தில் 71 மில்லி மீட்டர் மழை பதிவானது.

Update: 2018-10-04 22:00 GMT
விழுப்புரம், 

லட்சத்தீவு பகுதியில் வளிமண்டலத்தில் சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்கிழக்கு வங்கக்கடலில் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் வளிமண்டலத்தில் சுழற்சி உள்ளது. இந்த 2 சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி விழுப்புரம் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் நேற்று முன்தினம் பரவலாக சாரல் மழை பெய்த நிலையில் இரவில் பலத்த மழை பெய்யத்தொடங்கியது.

இந்த மழை இடைவிடாமல் 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. அதன் பின்னர் விடிய, விடிய சாரல் மழையாக தூறிக்கொண்டே இருந்தது. தொடர்ந்து, மீண்டும் அதிகாலை 3 மணிக்கு இடி-மின்னலுடன் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இடைவிடாமல் அதிகாலை 5 மணி வரை கொட்டித் தீர்த்தது. அதன் பிறகும் நீடித்த மழை நேற்று மதியம் 1 மணி வரை இடைவிடாமல் தூறிக்கொண்டே இருந்தது. மேலும் சிறிது நேரம் மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் மாலை வேளையில் பலத்த மழை பெய்தது.

இந்த மழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. விழுப்புரம் நகரில் உள்ள திரு.வி.க. சாலை, நேருஜி சாலை, கிழக்கு புதுச்சேரி சாலை, எம்.ஜி. சாலை, சென்னை நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மழைநீரில் ஊர்ந்து சென்றதை காண முடிந்தது.

அதுபோல் தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் குளம்போல் தேங்கியதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் தண்ணீர் ஓரளவு தேங்கியதும் நகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றினர். அதுபோல் கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையிலும் தேங்கியிருந்த தண்ணீர், மின்மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டதால் அப்பகுதி மக்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

திண்டிவனம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக திண்டிவனம் ஜெயபுரத்தில் காலை 6 மணி முதல் 11 மணி வரை 5 மணி நேரம் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். திண்டிவனம்- புதுச்சேரி சாலையில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் அங்குள்ள சாலையில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அதே பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

உளுந்தூர்பேட்டை பகுதியில் பெய்த மழையின்போது உளுந்தூர்பேட்டை-சேந்தநாடு சாலையில் உள்ள புளியமரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதனால் அங்கு சில நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொக்லைன் எந்திரம் மூலம் மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இதேபோல் களமருதூர், சேந்தநாடு, எலவனாசூர்கோட்டை, ஆசனூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது.

மேலும் விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், செஞ்சி, திருவெண்ணெய்நல்லூர், மயிலம், வானூர், மரக்காணம், கோட்டக்குப்பம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. இந்த மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்