கல்லிடைக்குறிச்சி, பாபநாசத்தில் தாமிரபரணி புஷ்கர விழா: பாதுகாப்பு ஏற்பாடு குறித்து டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் ஆய்வு

கல்லிடைக்குறிச்சி மற்றும் பாபநாசம் படித்துறை பகுதிகளில் தாமிரபரணி புஷ்கர விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2018-10-04 07:15 GMT
அம்பை, 

கல்லிடைக்குறிச்சி மற்றும் பாபநாசம் படித்துறை பகுதிகளில் தாமிரபரணி புஷ்கர விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் ஆய்வு மேற்கொண்டார்.

தாமிரபரணி புஷ்கர விழா

தாமிரபரணி மகா புஷ்கர விழா வருகிற 11-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை தாமிரபரணி ஆற்றில் உள்ள படித்துறைகளில் நடக்கிறது. இந்த விழா அம்பை, கல்லிடைக்குறிச்சி, ஊர்க்காடு உள்ளிட்ட 10 இடங்களில் நடக்கிறது. இப்பகுதிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உள்பட காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஏற்கனவே ஆய்வு செய்துள்ளனர்.

டி.ஐ.ஜி. ஆய்வு

இந்த நிலையில் கல்லிடைக்குறிச்சியில் புஷ்கர விழா நடைபெற உள்ள இடங்களை நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் நேற்று ஆய்வு செய்தார். அங்கு மாதா தாமிரபரணீஸ்வரர் ஆலயம், படித்துறை மற்றும் பக்தர்கள் நீராடும் பகுதிகளில் பக்தர்களுக்கான அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகளை பார்வையிட்டார். பின்னர் இதுதொடர்பாக மாதா தாமிரபரணி அறக்கட்டளை தலைவர் பத்மநாபனிடம் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு பாபநாசம் படித்துறை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாகீர் உசேன், இன்ஸ்பெக்டர்கள் பிரதாபன், கவுரி மனோகரி உள்ளிட்ட போலீசார் மற்றும் புஷ்கர கமிட்டியினர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்