தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: சி.பி.ஐ. விசாரணை விரைவில் தொடங்குகிறது

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை விரைவில் தொடங்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.;

Update: 2018-10-04 06:47 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை விரைவில் தொடங்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதற்காக வழக்குகள் தொடர்பான ஆவணங்களை ஒருங்கிணைத்து ஒப்படைக்கும் பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

துப்பாக்கி சூடு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி கடந்த மே மாதம் 22-ந் தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட கலவரம் காரணமாக துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடந்தது. இதில் 13 பேர் இறந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

இது தொடர்பாக தூத்துக்குடி சிப்காட், தென்பாகம், வடபாகம், மத்தியபாகம் மற்றும் புதுக்கோட்டை போலீஸ் நிலையங்களில் மொத்தம் 249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ஒரே வழக்காக...

இதில் துப்பாக்கி சூடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகள் மட்டும் சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டு 173 வழக்குகளை ஒரே வழக்காக விசாரிக்க உத்தரவிட்டது. ஏற்கனவே 5 வழக்குகளை விசாரித்து வந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், மற்ற 173 வழக்குகளுக்கான ஆவணங்களையும் பெற்று இணைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி உத்தரவிட்டது.

அரசு உத்தரவு

இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் திரட்டிய ஆவணங்களை சி.பி.ஐ. வசம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். தற்போது, இந்த வழக்குகளை சி.பி.ஐ. வசம் ஒப்படைப்பதற்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதனால் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் இருந்து கோர்ட்டு உத்தரவுப்படி 173 வழக்குகளை ஒரே வழக்காக இணைப்பதற்கான பணிகளை சி.பி.சி.ஐ.டி போலீசார் நேற்று தொடங்கினர்.

விரைவில் சி.பி.ஐ. விசாரணை

அதே நேரத்தில் கடந்த 23-ந் தேதி நடந்த சம்பவங்கள் தொடர்பான சில வழக்குகளை கூடுதலாக துப்பாக்கி சூடு சம்பவ வழக்குடன் சேர்ப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் சுமார் 200 வழக்குகள் வரை ஒரே வழக்காக இணைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த பணிகள் முடிவடைந்தவுடன் இந்த வார இறுதியில் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சி.பி.ஐ. வசம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒப்படைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தொடங்கும் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்