நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கு உதவ முடியாது : சினிமா கலைஞர்கள் சங்கம் அறிக்கை

நானா படேகர் மீது பாலியல் புகார் தெரிவித்த நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கு உதவ முடியாது என்று சினிமா கலைஞர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது.

Update: 2018-10-03 23:23 GMT
மும்பை,

இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் தமிழில் விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்து உள்ளார். பிரபல இந்தி நடிகரான நானா படேகர் மீது இவர் பாலியல் புகார் கூறினார். 2008-ம் ஆண்டு சினிமா படப்பிடிப்பு ஒன்றில் அவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இந்த பிரச்சினையில் சினிமா மற்றும் டி.வி. கலைஞர்கள் சங்கம் தனக்கு உதவவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். தன் மீதான பாலியல் புகார் குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தால், அதை சந்திக்க தயார் என்று நடிகை தனுதத்தாவுக்கு நானா படேகர் பதில் அளித்துள்ளார்.

இந்த நிலையில் சினிமா மற்றும் டி.வி. கலைஞர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2008-ம் ஆண்டில் நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தனுஸ்ரீ தத்தா அப்போதைய சினிமா மற்றும் டி.வி. கலைஞர்கள் சங்க நிர்வாகத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால் அப்போதைய சங்க நிர்வாகம் புகார் மீது நடவடிக்கை எடுக்க தவறி விட்டது. இதை சரியான நடவடிக்கையாக நாங்கள் கருதவில்லை. எங்களது சங்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் கண்ணியமும், சுயமரியாதையும் முக்கியம்.

ஆனால் 3 ஆண்டுகளுக்கு மேல் ஆன பழைய சம்பவத்தை விசாரிக்க எங்களது சங்க விதிமுறைகளில் வழியில்லை. எனவே நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கு எங்களால் உதவ முடியாது. சங்க உறுப்பினர்களை நாங்கள் கேட்டுக்கொள்வது என்னவென்றால், இதுபோன்ற சம்பவங்களில் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும்.

இதன் மூலம் தார்மீக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்