கும்மிடிப்பூண்டி பஜாரில் மதுக்கடை முன் பொதுமக்கள் மீண்டும் முற்றுகை போராட்டம்
கும்மிடிப்பூண்டி பஜாரில் மதுக்கடைமுன் பொதுமக்கள் மீண்டும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி பஜாரில் தனியார் திரையரங்கு அருகே கடந்த 1–ந்தேதி புதிதாக மதுக்கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுக்கடையை திறக்கக்கூடாது என அன்றைய தினம் பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து கும்மிடிப்பூண்டி தாசில்தார் மதன்குப்புராஜ் உத்தரவின்படி கடை மூடப்படுவதாக இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்தார். இதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த நிலையில், நேற்று மீண்டும் மேற்கண்ட மதுக்கடை திறக்க உள்ளதாகவும், போராட்டம் செய்த அன்றைய தினத்திலேயே கடை திறக்கப்பட்டதாகவும் பொதுமக்களிடையே தகவல் பரவியது.
இதனையடுத்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட இளைஞர் அணித்தலைவர் டி.எம்.செந்தில் குமார் தலைமையில் பெண்கள் உள்பட 150 பேர் மேற்கண்ட மதுக்கடை முன்பு நேற்று மீண்டும் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு கும்மிடிப்பூண்டி வருவாய் ஆய்வாளர் கந்தசாமி, கிராம நிர்வாக அதிகாரி பாக்கிய சர்மா, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக பொதுமக்களின் எதிர்ப்புக்கு எதிராக மதுக்கடை திறக்கப்பட மாட்டாது. எதுவாக இருந்தாலும் தாசில்தார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார் என வருவாய் ஆய்வாளர் கந்தசாமி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்தார். இதனையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.