கொள்ளிடம் ஆற்றில் இருந்து படகுகளில் மணல் கடத்தல்
சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் இருந்து படகுகளில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய இருவரை வலைவீசி தேடிவருகின்றனர்.
சிதம்பரம்,
சிதம்பரம் அருகே உள்ளது அக்கரைஜெயங்கொண்ட பட்டினம் கிராமம். இங்குள்ள கொள்ளிடம் ஆற்றில்இருந்து மணல் கடத்தப்படுவதாக அண்ணாமலை நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது ஆற்றின் நடுப் பகுதிக்கு, சென்ற சிலர் மீன்பிடி படகு மூலம் மணல் கடத்தலில் ஈடுபடுவது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் ஆற்று நீரின் உள்ளே இறங்கி சென்றனர். அதற்குள் 3 பேர் மற்றொரு கரை வழியாக தப்பி ஓடிவிட்டனர். 2 பேர் மட்டும் சிக்கினர்.
அவர்களிடம் விசாரித்ததில், சிதம்பரம் அருகே அக்கரைஜெயங்கொண்ட பட்டினம் கலியபெருமாள் மகன் ஜெயச்சந்திரன்(வயது 35), நாகை மாவட்டம் சீர்காழி நாதல்படுகையை சேர்ந்த ராஜதுரை மகன் மதியழகன்(வயது 29) என்பது தெரியவந்தது.
மேலும் தப்பி ஓடியவர்கள் நாகை மாவட்டம் பழையாறை சேர்ந்த அருள், இளையராஜா ஆவார்கள். இங்கிருந்து கடத்தப்படும் மணல் நாகை மாவட்டம் மற்றும் சிதம்பரம் பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயச்சந்திரன், மதியழகன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.