கண்டெய்னர் லாரி மீது பஸ் மோதி பெண் பலி; 17 பேர் படுகாயம்

ராமநாதபுரம் அருகே கண்டெய்னர் லாரி மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் பரிதாபமாக பலியானார். விபத்தில் 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-10-03 23:15 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து ராமநாதபுரம் வழியாக தென்காசிக்கு அரசு பஸ் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் சென்றது. இந்த பஸ் ராமநாதபுரம் அருகே பால்கரை பகுதியில் சென்றது. அப்போது தூத்துக்குடியில் இருந்து உப்பூர் அனல்மின் நிலையத்திற்கு பலகையால் அடைத்து 48,000 கிலோ எடையுள்ள பெரிய எந்திரத்தினை ஏற்றிக்கொண்டு வந்த கண்டெய்னர் லாரி வந்துகொண்டு இருந்தது.

அப்போது லாரி டிரைவர் லாரியின் முன்பகுதியை விட அகலமாக இருந்த எந்திரபகுதி ரோட்டில் வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை பலகையின் மீது மோதிவிடாமல் இருப்பதற்காக மறுபக்கமாக திருப்பி உள்ளார். இதில் எதிரே வந்த பஸ் நிலைதடுமாறி கண்டெய்னரின் பின்பகுதியில் எடுத்து வரப்பட்ட எந்திரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ் டிரைவர் இருக்கையின் பின்பக்க 3 இருக்கை பகுதிகளை வரை பஸ் நொறுக்கியது. பஸ் டிரைவரின் பின்பக்க இருக்கையில் இருந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் பஸ் டிரைவர் தென்காசி வீராணம் பகுதியை சேர்ந்த அருள்சேவியர்(வயது50) படுகாயமடைந்தார். டிரைவர் இருக்கையின் பின்னால் உள்ள இருக்கைகளில் இருந்த ராமேசுவரத்தை சேர்ந்த பிரியதர்சினி(12), அவருடைய அக்காள் மகேசுவரி(14) ஆகியோரும் இருக்கைகளின் உள்ளே சிக்கி கொண்டு கதறி அழுதனர். இவர்களுக்கு பெற்றோர் இல்லாததால் பாட்டி அன்னக்கிளியின் பராமரிப்பில் இருந்து வந்ததோடு பாளையங்கோட்டையில் உள்ள பள்ளியில் தங்கி படித்து வந்தனர்.

தேர்வு விடுமுறை முடிந்து பாட்டி அன்னக்கிளி பள்ளிக்கு அழைத்து செல்லும்போது இந்த விபத்தில் சிக்கி உள்ளனர். இவர்கள் இருவரின் கால் பகுதி இடிபாடுகளில் சிக்கியதால் தீயணைப்புத்துறையினர், போலீசார் மீட்பு பணியினர் கடும் முயற்சிக்கு பின்னர் அவர்களை மீட்டெடுத்தனர்.

இந்த விபத்தில் 6 ஆண்கள், 7 பெண்கள், 4 சிறுவர்கள் 17 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் தவிர 50 வயது பெண் மட்டும் பலியாகி உள்ளார். மற்ற அனைவரும் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவத்தை தொடர்ந்து கண்டெய்னர் லாரி டிரைவர் மற்றும் கிளீனர் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சம்பவம் பற்றி அறிந்த கலெக்டர் வீரராகவ ராவ் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து காயமடைந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்து அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் அளிக்க டாக்டர்களுக்கு உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான பெண் தங்கச்சிமடம் பகுதியில் இருந்து ஏறி வந்ததாக கூறப்படுகிறது. அவர் யார்? எந்த ஊர்? என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 4 வழிச்சாலைகளில் எடுத்துச்செல்லக்கூடிய பெரிய எந்திரத்தினை இருவழிச்சாலையில் கொண்டு வந்ததால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்