ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கிய 342 ஏக்கர் நிலத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை; ‘சட்ட விதிகளை பின்பற்றவில்லை’ எனவும் ஐகோர்ட்டு கருத்து

ஸ்டெர்லைட் ஆலையின் 2–வது யூனிட் தொடங்க குத்தகைக்கு வழங்கிய நிலத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்த உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. மேலும் இந்த வி‌ஷயத்தில் சிப்காட் நிர்வாகம் சட்ட விதிகளை பின்பற்றவில்லை என்றும் கருத்து தெரிவித்தது.

Update: 2018-10-03 23:30 GMT

மதுரை,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அதிகாரி சத்யபிரியா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையின் முதல் யூனிட்டுக்கு கடந்த 1994–ம் ஆண்டு 1,063 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த ஆலையின் முதல் யூனிட்டில் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த உற்பத்தியை இரு மடங்காக அதிகரிக்கும் நோக்கத்தில் சிப்காட் வளாகத்தில் 2–வது யூனிட் நிறுவுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்கு தேவைப்படும் இடத்தை குத்தகைக்கு வழங்கும்படி சிப்காட் நிறுவனத்திடம் விண்ணப்பித்தோம்.

எங்களின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட தூத்துக்குடி சிப்காட் நிர்வாகம், 342 ஏக்கர் நிலம் ஒதுக்கியது. இந்த நிலமானது 99 ஆண்டுகள் குத்தகை என்ற ஒப்பந்தத்தின்படி எங்களிடம் வழங்கப்பட்டது. நிலத்தை குத்தகைக்கு எடுத்தது குறித்து எங்கள் நிறுவனத்துக்கும், சிப்காட் நிறுவனத்துக்கும் இடையேயான ஒப்பந்த பத்திரத்தை ஓட்டப்பிடாரம் சார்–பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோம்.

இந்தநிலையில் எங்களுக்கு 342 ஏக்கர் நிலம் குத்தகைக்கு வழங்கிய ஒப்பந்தத்தை திடீரென ரத்து செய்து சிப்காட் நிர்வாக தலைவர் கடந்த மே மாதம் உத்தரவிட்டார். இதுதொடர்பாக எங்களிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை. முறைப்படி தான் எங்கள் நிறுவனத்தின் 2–வது யூனிட்டுக்கு நிலம் ஒப்பந்தம் செய்திருந்தோம். அதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்தி இருந்தோம். எனவே எங்கள் நிறுவனத்துக்கு நிலம் வழங்கிய குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்ய சிப்காட் நிர்வாகத்துக்கு அதிகாரம் கிடையாது. எனவே சிப்காட் நிறுவன தலைவரின் உத்தரவை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வி.பார்த்திபன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பு வக்கீல் ஆஜராகி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தின்போது போலீசாரின் துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்தனர். அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, ஸ்டெர்லைட் ஆலையின் 2–வது யூனிட்டுக்கு நிலம் வழங்கிய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இது அரசின் கொள்கை முடிவு ஆகும் என்று வாதாடினார். ஸ்டெர்லைட் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் பராசரன் ஆஜராகி வாதாடினார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு உள்பட பல்வேறு இடர்பாடுகள் ஏற்படும் என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அச்சம் தெரிவித்ததால், பொதுநலன் கருதி ஸ்டெர்லைட் ஆலை நில ஒப்பந்தத்தை அவசர கதியில் ரத்து செய்து உத்தரவிட்டது தெரிகிறது.

உண்மையில் அவ்வாறு ஒரு பிரச்சினை இருந்தால், ஸ்டெர்லைட் தரப்புக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பி, அவர்களின் கருத்தை கேட்டபின்பு உரிய உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். இது தான் அரசியலமைப்பு சட்டம் வலியுறுத்தும் இயற்கை நீதி. ஆனால் சிப்காட் தலைவர் நேரடியாக ஸ்டெர்லைட் நில குத்தகையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த வி‌ஷயத்தில் சட்ட விதிகளை சிப்காட் தலைவர் பின்பற்றவில்லை என்ற ஒரே காரணத்தை கருத்தில் கொண்டு, குத்தகைக்கு வழங்கிய நிலத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து அவர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்