நிர்மலாதேவி வழக்கை நாள்தோறும் விசாரித்து விரைந்து முடிக்க வேண்டும்; கீழ்கோர்ட்டுக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

பேராசிரியை நிர்மலாதேவி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தும், இந்த வழக்கை நாள்தோறும் விசாரித்து விரைவாக முடிக்க வேண்டும் என்றும் கீழ்கோர்ட்டுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2018-10-04 00:00 GMT

மதுரை,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக அந்த கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் அவருடன் தொடர்பு உடையதாக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் கருப்பசாமி தனக்கு முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு கடந்த ஜூலை மாதம் 12–ந்தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உத்தரவில், இந்த வழக்கில் மனுதாரர் உள்ளிட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்கக்கூடும். எனவே மனுதாரர் சிறையில் இருந்தபடியே தன் மீதான வழக்கு விசாரணையை சந்திக்க வேண்டும். வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் செப்டம்பர் 24–ந்தேதிக்கு முன்பு சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்ய வேண்டும். கீழ் கோர்ட்டு, செப்டம்பர் 24–ந்தேதியில் இருந்து 6 மாதத்தில் விசாரணையை முடித்து தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது. இதையடுத்து இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கீழ்கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

இதற்கிடையே நிர்மலாதேவியும், முருகனும் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களில், தங்களை 90 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைத்துள்ளதாக தெரிவித்து இருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி இளந்திரையன், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார். இந்தநிலையில் நேற்று அந்த மனுக்கள் மீதான தீர்ப்பை அவர் பிறப்பித்தார்.

அதில், மாணவிகள் தொடர்பான வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள கருப்பசாமி ஜாமீன் மனுவை ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல், வழக்கில் தொடர்புடையவர்களை ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளை கலைக்கலாம். அவர்கள் சிறையில் இருந்தபடியே வழக்கு விசாரணையை சந்திக்க வேண்டும். விரைவில் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது. அந்த உத்தரவின் அடிப்படையில் மனுதாரர்கள் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர்கள் மீதான வழக்கை கீழ்கோர்ட்டு நாள்தோறும் விசாரித்து விரைவாக முடிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்