பாதுகாப்பற்ற முறையில் உணவுபொருட்களை விற்கும் கடைகள்-ஒட்டல்கள் “சீல்” வைக்கப்படும் கலெக்டர் எச்சரிக்கை

பாதுகாப்பற்ற முறையில் உணவு பொருட்களை விற்கும் கடைகள், ஓட்டல் களுக்கு சீல் வைக்கப்படும் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2018-10-03 22:30 GMT
பெரம்பலூர்,

தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறையினர் உத்தரவின்படி, உணவுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அனைத்து உணவு கடைகள், தெருவோர கடைகள், காய்கறி கடைகள், பெட்டிக்கடைகளும், இம்மாத இறுதிக்குள் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுச்சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும். மேலும், பதிவு மற்றும் உரிமம் இல்லாமல் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உணவகங்களில் தரமான உணவு சுகாதாரமான முறையில் தயாரித்து பொது மக்களுக்கு கிடைக்க செய்யவேண்டும். உணவுப்பாதுகாப்பு சட்ட விதிகள் மீறும் நிறுவனங்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி, உரிமம் ரத்து செய்யப்பட்டு, உணவகம் மூடி “சீல்” வைக்கப்படும்.

நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டல்கள், உரிமம் பெற்று தரமான உணவு வழங்க வேண்டும். குடிநீர் நிறுவனங்கள் தரமான குடிநீர் வழங்க வேண்டும். இதை ஆய்வு செய்து விதி மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு நியமன அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து உணவு நிறுவனங்களும் ஒருமுறை பயன்படும் பிளாஸ்டி பைகளை முற்றிலும் தவிர்த்தல் வேண்டும். பிளாஸ்டிக் இல்லாத தமிழகம் உருவாகிட அனைத்து உணவு நிறுவனங்களும் பொது மக்களுக்கு உணவு பொருட்களை பாத்திரங்களில் வழங்க வேண்டும். இறைச்சி மையங்களில் பிளாஸ்டிக் பைகளை முற்றிலுமாக பயன்படுத்த கூடாது. தடை செய்த புகையிலை பொருட்கள், கடைகளில் விற்பனை செய்வது கண்டறிந்தால், கடைகள் மீது நடவடிக்கை எடுத்து மூடி “சீல்” வைக்கப்படும். மேலும் அரசு அலுவலர்கள் பிளாஸ்டிக் உபயோகிப்பதை முற்றிலும் தடுத்திட வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்