தனியார் பள்ளியில் ரூ.26¼ லட்சம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

வெள்ளியணை அருகே தனியார் பள்ளியின் லாக்கரை திறந்து ரூ.26¼ லட்சத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-10-03 23:00 GMT
வெள்ளியணை,

கரூரை அடுத்த காக்காவாடி பகுதியில் கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வேலம்மாள் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகளும் படித்து வருகின்றனர். மேலும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செலுத்தும் கல்விக்கட்டணம், விடுதி கட்டணம் ஆகியவை பள்ளி அலுவலகத்தில் வசூல் செய்யப்பட்டு அடுத்த நாள் வங்கியில் செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 29-ந் தேதியில் இருந்து அக்டோபர் 2-ந்தேதி வரை பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இதையொட்டி மாணவர்களை வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக கடந்த 29-ந்தேதி பள்ளிக்கு வெளிமாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகளின் பெற்றோர் அதிகளவில் வந்திருந்தனர். அவர்களின் பெரும்பாலானோர், தங்களது குழந்தைகளின் இரண்டாம் பருவ கல்வி கட்டணத்தை பள்ளி அலுவலகத்தில் செலுத்தினர். அவ்வாறு அன்று வசூலான தொகை ரூ.26 லட்சத்து 36 ஆயிரத்தை அலுவலகத்தில் உள்ள லாக்கரில் வைத்து பூட்டி சாவியை அலுவலகத்திலேயே வைத்து விட்டு பணியாளர்கள் சென்றனர். அந்த பணத்தை விடுமுறை முடிந்து வந்து வங்கியில் செலுத்திவிடலாம் என்று எண்ணியிருந்தனர்.

இந்த நிலையில் விடுமுறை முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று பள்ளியை திறப்பதற்காக பணியாளர்கள் வந்தனர். அப்போது, பள்ளி அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அங்கு பணம் வைக்கப்பட்டிருந்த அறையின் பூட்டும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் இது குறித்து பள்ளியின் முதல்வர் காந்திகிராமத்தை சேர்ந்த சாம்சனுக்கு தகவல் கொடுத்தனர்.

அவர் பள்ளிக்கு வந்து பார்வையிட்டு, வெள்ளியணை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வெள்ளியணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார், பள்ளியில் உள்ள அலுவலகத்திற்குள் சென்று பார்த்த போது லாக்கர் திறக்கப்பட்டு அதில் இருந்த ரூ.26 லட்சத்து 36 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கொண்ட பெட்டியையும் மர்மநபர்கள் எடுத்து சென்றிருந்தனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், பாரதி, துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா ஆகியோர் வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். விரல்ரேகை நிபுணர்கள் மர்மநபர்களின் ரேகைகளை பதிவு செய்து கொண்டனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் லக்கி வரவழைக்கப்பட்டது. அது அந்த பகுதியில் மோப்பம் பிடித்து விட்டு பள்ளி மைதானம் வரை ஓடி நின்று விட்டது.

இன்னொரு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவு காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் லாக்கர் சாவி இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு, அதை எடுத்து லாக்கரை திறந்து பணத்தை திருடி இருப்பதால் பள்ளிக்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்களுக்கு இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்பு இருக்குமா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்