பொள்ளாச்சியில் இன்று ஜேக்டோ–ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்; 287 ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுப்பதாக அதிகாரி தகவல்

கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சியில் ஜேக்டோ–ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

Update: 2018-10-03 22:15 GMT

பொள்ளாச்சி,

பொள்ளாச்சியில் இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஜேக்டோ–ஜியோ அமைப்பினர் தெற்கு ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இதில் கல்வி மாவட்டத்தில் 287 ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுக்க கடிதம் கொடுத்துள்ளதாக அதிகாரி கூறினார். தற்செயல் விடுப்பு போராட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 24 மாத ஊதிய குழு நிலுவை தொகையை வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம், மதிப்பூதியம், தொகுப்பூதியம் முறையினை கைவிட்டு, அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று (வியாழக்கிழமை) ஒரு நாள் ஜேக்டோ–ஜியோ அமைப்பினர் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகம் முன்பு இன்று காலை 10.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மேலும் ஜேக்டோ–ஜியோ அமைப்பினர் கூறுகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (இன்று) ஒரு நாள் ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்கின்றனர். அதை தொடர்ந்து 13–ந்தேதி சேலத்தில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடைபெறுகிறது. அடுத்த மாதம் 27–ந்தேதி முதல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என்றனர். இந்த நிலையில் ஆசிரியர் போராட்டம் குறித்து பொள்ளாச்சி கல்வி மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது:–

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 213 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் 287 ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுப்பதாக கடிதம் கொடுத்துள்ளனர். இருப்பினும் பள்ளிகள் செயல்பட மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனவே வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும். நாளை (இன்று) எத்தனை பேர் பணிக்கு வருகின்றனர் என்பதை பார்த்து, அதன்பிறகு தேவையான பள்ளிகளுக்கு மாற்று ஆசிரியர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்