ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2018-10-03 23:00 GMT
திருவாரூர்,

மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. புதுக்கோட்டை நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த முயன்றதை கண்டித்து பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை காவிரி டெல்டாவில் 2 இடங்கள் உள்பட தமிழகத்தில் 3 இடங்களில் செயல்படுத்துவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

தமிழகத்தின் நெற் களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் விவசாயமும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கும் சூழ்நிலை உள்ளதால் அனைத்து தரப்பினரும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

அதன்படி நேற்று திருவாரூர் பஸ் நிலையம் அருகில் திருவாரூர், நாகை, தஞ்சை ஆகிய 3 மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் தலைமை தாங்கினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன்(திருவையாறு), மதிவாணன் (கீழ்வேளூர்), டி.ஆர்.பி.ராஜா(மன்னார்குடி), ஆடலரசன்(திருத்துறைப்பூண்டி), ராமச்சந்திரன்(ஒரத்தநாடு), அன்பழகன்(கும்பகோணம்), கோவி.செழியன்(திருவிடைமருதூர்), முன்னாள் எம்.பி. விஜயன், மாவட்ட செயலாளர்கள் நிவேதா முருகன், கவுதமன், கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பழனிமாணிக்கம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

காவிரி டெல்டா மாவட்டத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு, அதற்கான அனுமதியையும் மத்திய அரசு வழங்கியுள்ளது. இதுமட்டுமின்றி தூத்துக்குடியில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆய்வு பணிகள் துரிதமாக நடந்து முடிந்துள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் தொடங்குவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மக்களை அழிக்கும் திட்டங்களுக்கு மட்டும் மத்திய அரசு வேகமாக செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தின் நாகரீகம், பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை காப்பாற்ற வேண்டிய மத்திய அரசு, அதை அழிக்க நினைக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்