தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்பு நெல்லை எட்டெழுத்து பெருமாள் கோவிலில் கோ பூஜை

நெல்லை எட்டெழுத்து பெருமாள் கோவிலில் கோபூஜை நடந்தது. இதில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு கோ பூஜை செய்தார்.

Update: 2018-10-03 21:45 GMT
நெல்லை, 

நெல்லை எட்டெழுத்து பெருமாள் கோவிலில் கோபூஜை நடந்தது. இதில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு கோ பூஜை செய்தார்.

மகா புஷ்கர விழா 

தாமிரபரணி மகா புஷ்கர விழா வருகிற 11–ந்தேதி தொடங்கி 22–ந்தேதி வரை தாமிரபரணி ஆற்றில் உள்ள படித்துறைகளில் நடக்கிறது. நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை சார்பில் தாமிரபரணி மகா புஷ்கர விழா நடத்தப்படுகிறது. இந்த புஷ்கர விழா எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயு படித்துறையில் வருகிற 9–ந்தேதி காலை 6 மணிக்கு தசமஹா வித்யா யாகம், கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது.

இதைத்தொடர்ந்து காலை 7 மணிக்கு கொடியேற்றம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து ஹோமம் நடக்கிறது. 10–ந்தேதி காலையில் மகாகாளி யாகம் நடக்கிறது. 11–ந்தேதி காலை 6 மணிக்கு சுவாமி தீர்த்தவாரி, 9 மணிக்கு யாகசாலை பூஜையும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு மகா ஆரத்தியை எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயு படித்துறையில் தொடங்கி வைக்கிறார்.

12–ந்தேதி காலையில் ராஜமாதங்கி யாகம், 13–ந்தேதி காலையில் திரிபுர பைரவி யாகமும், மாலையில் வைணவ திருவிழாவும், 14–ந்தேதி காலையில் சின்னமஸ்தா யாகமும், மாலையில் வைணவ திருவிழாவும், 15–ந்தேதி காலையில் ஷோடச யாகமும், மாலையில் வைணவ திருவிழாவும் நடக்கிறது. 16–ந்தேதி காலையில் தூமாவதி யாகம் நடக்கிறது.

மகா சண்டியாகம் 

17–ந்தேதி காலையில் பகளாமுகி யாகம், 18–ந்தேதி காலையில் கமலாத்மிகா யாகம், 19–ந்தேதி காலையில் புவனேசுவரி யாகம், 20–ந்தேதி காலையில் வராகி யாகம், 21–ந்தேதி காலையில் பிரத்திரிங்காரா யாகம், 22–ந்தேதி காலையில் மகா சண்டியாகம் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை 5 மணிக்கு சுவாமிக்கு தீர்த்தவாரியும், கோபூஜையும், மாலை 4 மணிக்கு ஆரத்தியும் நடக்கிறது.

கோ பூஜை 

இதையொட்டி எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயு துறையில், சிதிலமடைந்த படித்துறைகளை அகற்றிவிட்டு அங்கு புதிதாக கருங்கல்லால் படித்துறை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியை நேற்று முன்தினம் தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து அவர் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலைக்கு சென்று கோபாலகிருஷ்ணரை வழிபட்டார். பின்னர் அவரை மாடுகளை அலங்கரித்து பூதூவி, ஆரத்தி எடுத்து கோபூஜை செய்தார்.

இதில் மாநில மகளிர் அணி பொதுச்செயலாளர் கனிஅமுதா, மாவட்ட தலைவர் தயாசங்கர் மற்றும் எட்டெழுத்து பெருமாள் கோவில் வரதராஜ சுவாமிகள், ராமலட்சுமி அம்மாள், சண்முகராஜ், பலவேசம் சுவாமிகள், சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்