சரியான உயரம், எடை உள்ளனரா? 6 வயது வரையுள்ள குழந்தைகள் கணக்கெடுப்பு வருவாய் அலுவலர் வீரப்பன் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 வயது வரையுள்ள குழந்தைகள் சரியான உயரம், எடை உள்ளனரா? என கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருவதாக வருவாய் அலுவலர் வீரப்பன் தெரிவித்தார்.;

Update: 2018-10-03 22:00 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 வயது வரையுள்ள குழந்தைகள் சரியான உயரம், எடை உள்ளனரா? என கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருவதாக வருவாய் அலுவலர் வீரப்பன் தெரிவித்தார்.

கிராமசபை கூட்டம்

தூத்துக்குடி ஒன்றியம் மறவன்மடம் ஊராட்சியில் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் பிரசாந்த், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிராமசபை கூட்டத்தில், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை ஒழித்தல், குடிநீர் சிக்கனம், கொசு மூலம் பரவும் நோய் தடுப்பு விழிப்புணர்வு, கிராம கணக்கு தணிக்கை, முழு சுகாதாரம், திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லா நிலையை உருவாக்குதல், அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில் கழிப்பறைகள் பயன்பாடு, உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

சத்துணவு

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் பேசியதாவது;–

கிராம மக்கள் கிராம கணக்குகளை, சமூக தணிக்கை செய்திடவும், கிராமத்திற்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை தேர்வு செய்யவும், கிராமசபையின் மூலம் மக்கள் பங்காற்றலாம். இங்கு பல்வேறு பகுதிகளிலும் கூடுதல் குடிநீர் குழாய் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இவைகளை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும். 

டெங்கு விழிப்புணர்வு குறித்தும், காசநோய் விழிப்புணர்வு குறித்தும் இங்கு தெரிவிக்கப்பட்டது. மாவட்டத்தில் 6 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளும் சரியான உயரம், எடை உள்ளனரா என்பது குறித்து கணக்கெடுப்பு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் சத்துணவு வழங்குவது குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட உள்ளது. அரசின் திட்டங்களை அனைவரும் முழுமையாக தெரிந்து பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

யார்–யார்?

இந்த கூட்டத்தில், ஊராட்சிகள் உதவி இயக்குனர் உமா சங்கர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியம், துணை இயக்குனர்கள் கீதாராணி (சுகாதாரப்பணிகள்), கல்யாணசுந்தரம், தாசில்தார் சிவகாமசுந்தரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்