காந்தி சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை

மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு கவர்னர், தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2018-10-02 22:45 GMT
புதுச்சேரி,

மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு புதுவை கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலை அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. சிலைக்கு கவர்னர் கிரண்பெடி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, கமலக்கண்ணன், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா, அரசு செயலாளர்கள் அன்பரசு, கந்தவேலு உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தொடர்ந்து மும்மத பிரார்த்தனை நடந்தது. அதன்பின் பாரதியார் பல்கலைக்கூட ஆசிரியர்கள், மாணவிகள் தேச பக்தி பாடல்களை பாடினார்கள். மேலும் ராட்டையில் நூல் நூற்கவும் செய்தனர்.

காலாப்பட்டில் உள்ள புதுவை பல்கலைக்கழகத்தில் நடந்த காந்தி பிறந்தநாள் விழாவில் துணைவேந்தர் குர்மீத் சிங் கலந்துகொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்கு கூடியிருந்த பேராசிரியர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

தொடர்ந்து அவர் காந்தீய ஆய்வியல் மையத்தின் சார்பில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மேலாண்மை துறை பேராசிரியர் பிரபாகர ராயா மற்றும் மாணவர்கள் சுக்மணி சர்மா, ஆர்த்தி ஆகியோர் காந்தியின் அகிம்சை நெறிகள் குறித்து பேசினார்கள்.

தாகூர் கலைக்கல்லூரியில் நடந்த விழாவில் கல்லூரி முதல்வர் இளங்கோ தலைமையில் காந்தியின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து காந்தியின் அறவழியை விளக்கும் விதமாக பாதயாத்திரை நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் கண்ணன், கோவலன் மற்றும் தேசிய மாணவர் படை பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

புதுச்சேரி தலைமை தபால் நிலைய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை தபால் அதிகாரி செந்தில் குமார் மகாத்மா காந்தியின் அறப்போராட்டம் குறித்த விளக்கி கூறினார். நிகழ்ச்சியில் துணை தபால் அதிகாரிகள் தாமோதரன், ரெஜிஸ் மரியநாதன், மாலதி மற்றும் ரெட்சக நாதன், திருமுருகன், கருணாகரன், சுகுணா உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

புதுவை கலவைக்கல்லூரி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு விரிவுரையாளர் ஆரோக்கியராஜா தலைமை தாங்கினார். உடற்கல்வி விரிவுரையாளர் திமோத் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் ராஜசேகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். விழாவில் மகாத்மா காந்தியின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. முடிவில் ஆசிரியர் பிரேம்குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்