விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட வாலிபர் தப்பி ஓட்டம்
கச்சிராயப்பாளையம் அருகே பெண், தீக்குளித்து இறந்த வழக்கில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட வாலிபர் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கச்சிராயப்பாளையம்,
கச்சிராயப்பாளையம் அருகே உள்ள அக்கராயப்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 38). இவருடைய மனைவி அஞ்சலை(30). சுரேஷ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அஞ்சலை சம்பவத்தன்று வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவர் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் அஞ்சலை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் அஞ்சலையின் செல்போனை சோதனை செய்ததில் அதே பகுதியை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அஞ்சலையுடன் அதிக நேரம் பேசியது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் விசாரணைக்காக கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.
இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் இருந்து அந்த வாலிபர் நேற்று அதிகாலை திடீரென தப்பிச்சென்றதாக தெரிகிறது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை தேடினர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அந்த வாலிபரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீஸ் நிலையம் வந்தனர். அப்போது தங்களது மகனை பார்க்கவேண்டும் என்று போலீசாரிடம் கேட்டனர். அதற்கு போலீசார் உங்களது மகன் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றுவிட்டார் என்று கூறினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த வாலிபரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், தங்கள் மகன் காணாமல் போனதற்கு போலீசார் தான் காரணம், எனவே அவரை கண்டு பிடித்து தரக்கோரி கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் அக்கராயப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காணாமல் போனவரை விரைவில் கண்டுபிடித்து தருவதாக போலீசார் கூறினர். இதையேற்று அவர்கள் மறியலை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் மேற்பார்வையில் கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அந்த வாலிபரை தேடி வருகின்றனர். போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட வாலிபர் தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.