காவல்துறையில் கருப்பு ஆடுகளை அனுமதிக்க முடியாது - முதல் அமைச்சர் நாராயணசாமி பேச்சு
புதுவை காவல்துறையில் கருப்பு ஆடுகளை அனுமதிக்க முடியாது என முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
புதுச்சேரி காவல்துறை 1963–ம் ஆண்டு அக்டோபர் 1–ந் தேதி தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆண்டுதோறும் அக்டோபர் 1–ந் தேதி காவல்துறை உதய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 55–வது உதயதினம் கோரிமேட்டில் உள்ள காவலர் பயிற்சி மைதானத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா தலைமை தாங்கினார். முதல்–அமைச்சர் நாராயணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அவர், காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து அவர், முதலியார்பேட்டை சப்–இன்ஸ்பெக்டர் ராஜன், வில்லியனூர் உதவி சப்–இன்ஸ்பெக்டர் லட்சுமி நாராயணன், பள்ளூர் தலைமை காவலர் பினாபரமேல், உருளையன்பேட்டை காவலர் வரதராஜபெருமாள், பெண் காவலர் ஜெனிபர், ஏட்டுகள் ஷீஜேஷ், சுஜித், ஜித்தேஷ், சங்கர், நரேந்திரன், நாகராணி, ஏழுமலை, சுந்தரலிங்கம், ரிஜேஷ்குனில், குக்கல துர்கா பிரசாத் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
விழாவில் போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா பேசியதாவது:–
புதுவை மாநிலம் மிக சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சட்டம்–ஒழுங்கை காவல்துறையினர் கட்டுக்குள் வைத்திருப்பது தான். மாநிலத்தின் அமைதியை பாதுகாக்க சிறப்பாக செயல்பட்டு வரும் ஒவ்வொரு அதிகாரிகளையும் மனதார பாராட்டுகிறேன்.
நிதி நெருக்கடி காரணமாக எந்தவித சலுகைகளையும் பெறாமல் 24 மணி நேரமும் காவலர்கள் பணியாற்றி வருகிறீர்கள். உங்களுக்கும், உங்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பொதுமக்கள் அச்சமின்றி வாழ நமது பணியை சிறப்பாக மேற்கொள்வோம் என நாம் உறுதியேற்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–
பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தில் இருந்து இந்திய அரசின் அனைத்து சட்டங்களும் புதுவையில் கடந்த 1963–ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நாளை காவல்துறை உதய தினமாக கொண்டாடி வருகிறோம். இந்த விழாவில் கலந்துகொண்டு காவல்துறையை சேர்ந்தவர்களை கவுரவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நமது காவல்துறை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. காவலர்கள் பொதுமக்களின் நண்பனாக பழகி வருகிறார்கள்.
குற்றம் நடந்த 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த காலங்களில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, நகை பறிப்பு, நிலம் அபகரிப்பு, தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறியது. தற்போது அவை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக காவல்துறையின் உயர் அதிகாரிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
புதுவை அரசுக்கு காவல்துறையினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கான சலுகைகள், நியாயமான கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். காவல் நிலையத்தை பராமரிக்க நிலைய அதிகாரியிடம் அளிக்கப்படும் தொகையை ரூ.25 ஆயிரமாக மாற்றி உத்தரவிட்டு உள்ளோம்.
இந்தநிலையில் சட்டம்–ஒழுங்கை பாதுகாக்க 10 வாகனம் புதிதாக வாங்கப்பட்டு உள்ளது. காரைக்காலில் 6 ரோந்து வாகனங்கள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. காவலர் தேர்வுக்கு 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். உரிய தகுதி அடிப்படையில் காவலர்கள் பணிநியமனம் செய்யப்படுவார்கள். காவல் துறைக்கு தேவையான நவீன தொழில்நுட்ப வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. கஞ்சா மற்றும் போதை பொருட்கள், லாட்டரி சீட்டுகள் விற்பனை குறைந்துள்ளது. அதனை முற்றிலும் ஒழிக்க வேண்டும். காவல் துறையில் கருப்பு ஆடுகள் இருப்பதை அனுமதிக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
கோரிமேடு காவலர் பயிற்சி மையத்தில் நடைபெற்ற காவலர் உதயநாள் நிகழ்ச்சியில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்ற போது வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. அப்போது அணிவகுப்பில் பங்கேற்ற போலீசார் அனைவரும் மைதானத்தின் மத்தியில் வெயிலில் நின்றுகொண்டிருந்தனர்.
முதல்–அமைச்சர் பேசும்போது, அணிவகுப்பில் பங்கேற்ற 3 பெண் காவலர்கள் உள்பட 4 பேர் அடுத்தடுத்து மயக்கம்போட்டு விழுந்தனர். உடனே முதல்–அமைச்சர் நாராயணசாமி அணிவகுப்பில் பங்கேற்ற காவலர்களை நிழலுக்கு செல்லும்படி அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து அணிவகுப்பில் பங்கேற்றவர்கள் அங்கிருந்து கலைந்து நிழலான பகுதிக்கு சென்றனர்.