ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் பிணமாக மீட்பு
ஒரத்தநாடு அருகே கபடி போட்டியில் பங்கேற்க வந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் நேற்று பிணமாக மீட்கப்பட்டார்.
ஒரத்தநாடு,
அரியலூர் மாவட்டம் கல்லேரி கிராமத்தை சேர்ந்தவர் சூசைராஜ். இவருடைய மனைவி செபஸ்தியம்மாள். இவர்களின் மகன் பிலிக்ஆன்ரோஸ்(வயது19). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் பிலிக் ஆன்ரோஸ் அவரது நண்பர்களுடன் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள கருக்காடிப்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற கபடி போட்டியில் பங்கேற்க வந்தார்.
போட்டி முடிந்தபிறகு பிலிக்ஆன்ரோஸ் உள்ளிட்ட அவரது நண்பர்கள் ஊருக்கு புறப்பட்டு செல்லும் முன் கருக்காடிப்பட்டி பாலம் அருகில் கல்லணைக்கால்வாய் ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது திடீரென பிலிக்ஆன்ரோஸ் தண்ணீரில் மூழ்கி ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஆற்றில் இறங்கி அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் அவரை காப்பாற்ற முடியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த ஒரத்தநாடு தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று மதியம் வெட்டிக்காடு பாலம் அருகே ஆற்றில் பிலிக்ஆன்ரோஸ் பிணமாக மிதந்தார். அவரது உடலை அந்த கிராம இளைஞர்கள் மீட்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாார்கள்.