இறால் பண்ணைகளால் நிலத்தடி நீர் பாதிப்பு; கலெக்டரிடம் பெண்கள் மனு

இறால் பண்ணைகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கோரைக்குளம் பகுதி பெண்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2018-10-01 22:00 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள கோரைக்குளம் பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் திரளாக வந்துஅளித்த மனுவில் கூறியிருப்பதாவது:– எங்கள் பகுதியில் அதிகமாகி வரும் இறால் பண்ணைகளால் நிலத்தடி நீர்ஆதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு நாள்தோறும் குடிநீருக்காக பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று எடுத்து வந்து பயன்படுத்துகிறோம். காவிரி குடிநீர் எங்கள் பகுதிக்கு வருவதில்லை. மின்கம்பங்கள், மின்வயர்கள் மோசமான நிலையில் உள்ளன.

மின்தடை ஏற்பட்டால் உடனே மின்சாரம் வருவதில்லை. எங்கள் பகுதி வழியாக நாள்தோறும் 4 தடவை ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரைக்கு சென்று வந்த பஸ் இப்போது ஒரு தடவைதான் வருகிறது. இதனால் நாங்கள் சொல்ல முடியாத அவதி அடைந்து வருகின்றோம். உடனடியாக எங்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசை அருகே உள்ள நொச்சியூருணி பகுதியை சேர்ந்த சித்திரை முத்துச்சாமி மனைவி நிர்மலா தனது மகள் யோகஷிபானா என்பவருடன் வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:– எனது கணவர் கோட்டைப்பட்டிணத்தில் உள்ள மீன்கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அவர் அவருடைய பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் காணவில்லை. புகாரின் அடிப்படையில் போலீசி£ர் தேடிவருகின்றனர். இந்நிலையில் எனது கணவரின் உடன் பிறந்தவர்களுக்கு சொந்தமான கூட்டு சொத்தினை அவரின் குடும்பத்தினர் சவடுமண் எடுக்க ஒப்பந்தபத்திரம் தயாரித்து கொடுத்துள்ளனர். அதில் எனது கணவரின் கையொப்பம் இல்லாமல் எவ்வாறு ஒப்பந்தம் செய்தனர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து கேட்டபோது கொலைமிரட்டல் விடுக்கின்றனர். இதனால் எனது கணவரை கடத்தி வைத்துள்ளனரா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இதில் மர்மம் உள்ளதால் உரிய விசாரணை நடத்த வேண்டும். எனது கணவரை கண்டுபிடித்துதர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

உச்சிப்புளி அருகே உள்ள நாகாச்சி தென்கிழக்கு மறவர் நல சங்க நிர்வாகிகள் தங்கள் பகுதியில் 250 டேங்கர் லாரிகளில் இரவு–பகலாக வியாபார நோக்கில் தண்ணீர் எடுத்து விற்பனை செய்துவருவதால் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்