தசரா விழாவையொட்டி பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு பழங்கால கார்கள் அணிவகுப்பு குமாரசாமி தொடங்கி வைத்தார்
தசரா விழாவையொட்டி பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு பழங்கால கார்கள் அணிவகுப்பை முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார்.;
பெங்களூரு,
தசரா விழாவையொட்டி பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு பழங்கால கார்கள் அணிவகுப்பை முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார்.
பழங்கால கார்கள் பயணம்
தசரா விழாவையொட்டி பழங்கால கார் உரிமையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் கர்நாடக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் மைசூருவுக்கு பழங்கால கார்கள் பயண தொடக்க விழா பெங்களூரு விதான சவுதா முன்பகுதியில் வைத்து நேற்று நடந்தது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு பழங்கால கார்களின் அணிவகுப்பை கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது:-
தசரா விழாவையொட்டி இந்த பழங்கால கார்கள் மைசூருவுக்கு பயணம் மேற்கொள்கின்றன. இந்த பயணத்தில் பழங்கால கார்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இந்த கார்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்துள்ளது. 1924-ம் ஆண்டு ஓடிய கார்களும் இந்த பயணத்தில் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
விருந்தாக அமையும்
இங்கிலாந்து உள்பட வெளிநாடுகளை சேர்ந்த சில கார்களும் இதில் கலந்து கொண்டுள்ளன. இத்தகைய கார்களை பார்க்கும்போது, இதுபோன்ற கார்களும் இருந்ததா? என்ற ஆச்சரியத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. இந்த கார்கள் தசரா விழாவை காண வருபவர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
இவ்வாறு குமாரசாமி பேசினார்.
மைசூருவுக்கு சென்ற அந்த கார்களை பொதுமக்கள் ஆர்வமாக பார்த்து ரசித்தனர். இந்த பயணத்தில் 50 கார்கள் கலந்து கொண்டன. இதில் இங்கிலாந்து, பிரான்சு, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும் 22 கார்களும், பெங்களூருவை சேர்ந்த 16 கார்களும், மாநிலத்தின் பிறகு பகுதிகளை சேர்ந்த 12 கார்களும் இடம் பெற்றிருந்தன.