கடலூர் மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை
கடலூர் மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசாரின் சோதனை நடந்த போது நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர்,
நாகை மாவட்டம் மயிலாடுதுறை நீடூரை சேர்ந்தவர் மன்சூர்அலி (வயது 52). இவர் மயிலாடுதுறையில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் தண்டனை பெற்று கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதியாக அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் நேற்று மற்றொரு கைதியான அன்சர் மீரானை சிறையை தகர்த்து கடத்தப் போவதாக வந்த தகவலை தொடர்ந்து திருச்சி சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் மற்றும் சிறை அலுவலர்கள் கைதிகளின் அறைகளை சோதனை செய்தனர். அதன்படி மன்சூர்அலி அறையை சோதனை செய்த போது, அவர் அங்கு தூக்குப்போட்ட நிலையில் கிடந்தார். இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் சிறை அலுவலர்கள், அவரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சோதனை நடந்து கொண்டிருக்கும் போதே, மன்சூர்அலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிறைக்குள் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.