அரசு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி தொடர் போராட்டம்; ஏ.ஐ.டி.யு.சி. முடிவு
அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி தொடர் போராட்டம் நடத்த ஏ.ஐ.டியு.சி. முடிவு செய்துள்ளது.
புதுச்சேரி,
புதுவை அரசுத்துறை, அரசு சார்பு நிறுவனங்கள், கார்ப்பரேசன்கள், கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி. இணைப்புடைய சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டம் ஏ.ஐ.டி.யு.சி. தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. செயல் தலைவர் அபிசேகம் தலைமை தாங்கினார்.
தலைவர் தினேஷ் பொன்னையா, பொதுச்செயலாளர் சேதுசெல்வம், பொருளாளர் ஜெயபாலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு 6 மாதம் முதல் 50 மாதங்கள் வரை சம்பளம் வழங்கப்படாமல் இருந்து வருவது குறித்து விவாதிக்கப்பட்டது. அதேபோல் 3 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை தினக்கூலி ஊழியர்களாகவே பணிநிரந்தரம் செய்யப்படாமல் வேலை செய்து வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் அரசுத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற பலருக்கு வழங்கவேண்டிய பணிக்கொடை வழங்கப்படாமல் இருந்து வருவது குறித்தும் பேசப்பட்டது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்துவது எனவும் வருகிற 7–ந்தேதி அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைந்து முதல்கட்டமாக கருத்தரங்கு நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.