8 ஆண்டுகளாக தொகுதியை கண்டுகொள்ளவில்லை; இடைத்தேர்தலுக்காக நலத்திட்ட உதவிகளை வாரி வழங்குகிறார்கள் - மூர்த்தி எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

திருப்பரங்குன்றம் தொகுதியை கடந்த 8 ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு தற்போது இடைத்தேர்தலுக்காக நலத்திட்ட உதவிகளை வாரி வழங்குகிறார்கள் என்று மூர்த்தி எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2018-09-30 22:30 GMT

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் பைபாஸ் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதி செயலாளர் கிருஷ்ணபாண்டி வரவேற்றார். கூட்டத்தில் மூர்த்தி எம்.எல்.ஏ. பேசியதாவது:–

ஓராண்டுக்கு முன்பு நடைபெற்ற திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி தேர்தலில் ஆளும் கட்சியான அ.தி.மு.க. கோடிக்கணக்கில் செலவு செய்தது. அதில் குறிப்பிட்ட வார்டுகளில் அ.தி.மு.க.வை விட 100 ஓட்டுகளும், சில ஊராட்சிகளில் 300 ஒட்டுகளுமாக குறைவாக பெற்று தி.மு.க. வெற்றிவாய்ப்பை இழந்தது. ஆனால் நடைபெறக்கூடிய இடைத்தேர்தலில் புது வியூகம் வகுத்து அ.தி.மு.க.வை எதிர்கொண்டு தி.மு.க. வெற்றிபெறும்.

கடந்த 8 ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் தொகுதி மக்களுக்கு அ.தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை. குறிப்பாக சொல்ல போனால் திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதிகளில் பாதாள சாக்கடை வசதி செய்யப்படவில்லை. மேலும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. தற்போது இடைத்தேர்தலுக்காக கிராமம், கிராமமாக சென்று நலத்திட்ட உதவிகளை வாரி வழங்குகின்றனர். இருப்பினும் அது மக்களுக்கு கிடைக்கவில்லை. ஆர்.கே.நகர் தொகுதி போல திருப்பரங்குன்றத்தை அ.தி.மு.க.வோ, அ.ம.மு.க.வோ நினைத்து விட வேண்டாம். தி.மு.க. பக்கமே மக்கள் உள்ளனர். எனவே தேர்தல் எப்போது வந்தாலும் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய செயலாளர் பெரியசாமி, முன்னாள் அறங்காவலர் மகா கணேசன், முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி உசிலை சிவா, முன்னாள் கவுன்சிலர்கள் தங்கம் பவுன்ராஜ், சாமிவேல், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் விமல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்