வி.களத்தூரில் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் திருவிழாவையொட்டி 144 தடை உத்தரவு
வி.களத்தூரில் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் திருவிழாவையொட்டி 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூரில் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் ராயப்பர், செல்லியம்மன், மாரியம்மன் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இக்கோவில் திருவிழாவை ஒரு பிரிவினர் நேற்று முன்தினம் தொடங்கி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை நடத்துவது எனவும், அதனைத்தொடர்ந்து 3 நாட்கள் சுவாமி வீதி உலா நடத்துவது எனவும் முடிவு செய்திருந்தனர். இதற்கு மற்றொரு பிரிவினர் எங்கள் தெருவழியாக கடந்த ஆண்டு நடத்தியது போல ஒரு நாள் மட்டுமே சுவாமி வீதிஉலா நடத்த வேண்டும். மூன்று நாட்கள் வீதி உலா நடத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக இருபிரிவினரையும் அழைத்து மாவட்ட நிர்வாகம் சார்பில், பல முறை அமைதி பேச்சுவார்த்தை நடத்தி கடந்த ஆண்டைப்போலவே ஒரு நாள் மட்டும் சுவாமி வீதி உலா நடத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.
ஆனால் பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. திருவிழாவை நடத்தும் ஒரு பிரிவினர் திட்டமிட்டப்படி நாங்கள் ஆண்டாண்டு காலமாக எப்படி சுவாமி வீதி உலா நடத்துவோமோ அதேபோல் தற்போதைய திருவிழாவின் போதும் 3 நாட்களும் சுவாமி வீதிஉலா நடத்தியே தீருவோம் என திருவிழாவிற்கான ஏற்பாடுகளை நேற்று முன்தினம் செய்ய தொடங்கினர். இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவானது. இந்த பகுதியில் இருபிரிவினரிடையே ஏற்பட்டுள்ள பதட்டமான சூழ்நிலையை தவிர்க்கும் பொருட்டு பெரம்பலூர் உதவி கலெக்டர் விசுவநாதன் வி.களத்தூரில் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் தொடங்கி வருகிற 4-ந்தேதி இரவு 9 மணி வரை 144 தடை உத்தரவு போட்டுள்ளார். தடை உத்தரவு காலங்களில் உள்ள நடைமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து பாதுகாப்புக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.