மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் சாவு
மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சுவற்றில் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
கரூர்,
திருச்சி ஸ்ரீரங்கம் கொடிபாலம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால்(வயது 34). இவர், கோவையிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இவர் கோவையில் இருந்து புறப்பட்டு கரூர் வழியாக திருச்சியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கோவை-கரூர் சாலை மில்கேட் பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக ஜெயபால் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி அங்கிருந்த மையத்தடுப்பு சுவரில் மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.