தொழிலாளியை ஓட, ஓட விரட்டி வெட்டிய 4 பேர் கைது

சண்முகாபுரத்தில் தொழிலாளியை ஓட, ஓட விரட்டி வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-30 00:00 GMT

மூலக்குளம்,

புதுச்சேரி சண்முகாபுரத்தை அடுத்த வடக்கு பாரதிபுரம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் சதீஷ்குமார்(வயது 19). தொழிலாளி. அதே பகுதியில் கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பை சேர்ந்த கனகராஜ் (29) என்பவர் தங்கி பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வருகிறார். கட்டிட தொழிலில் ஈடுபட்டதையொட்டி பழக்கம் ஏற்பட்டு நண்பர்கள் ஆனார்கள்.

இந்தநிலையில் சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு சதீஷ்குமார் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த கனகராஜ் அவரிடம் மது குடிக்க பணம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பணம் கொடுக்காமல் அவரை சதீஷ்குமார் அடித்து விரட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கனகராஜ் இது குறித்து தனது நண்பர்களான பன்னீர்செல்வம், பூபதி உள்பட 3 பேரிடம் தெரிவித்துள்ளார். உடனே அவர்கள் 4 பேரும் சேர்ந்து சதீஷ்குமாரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டனர். இதற்காக அவர்கள் நேற்று முன்தினம் அதிகாலை சதீஷ்குமாரின் வீட்டில் இருந்து வெளியே செல்லும் ஒரு இடத்தில் பதுங்கி இருந்தனர். அதிகாலையில் சதீஷ்குமார் அந்த வழியாக வந்தார். அப்போது அவர்கள் 4 பேரும் அரிவாளுடன் சதீஷ்குமாரை சுற்றி வளைத்தனர். உடனே அவர்களிடம் இருந்து சதீஷ்குமார் தப்பி ஓடினார்.

ஆனால் அவர்கள் விடாமல் ஓட ஓட விரட்டி தாக்கினர். இதில் அவரது தலை, தோள்பட்டையில் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். அதன்பிறகும் விடாமல் சதீஷ்குமாரின் கழுத்தை அறுத்து விட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர். படுகாயம் அடைந்த சதீஷ்குமார் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் சதீஷ்குமாரைன் தாக்கிய 4 பேரும் மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று கனகராஜ், பன்னீர்செல்வம், பூபதி மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 4 பேரையும் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், சதீஷ்குமார் மீது தாக்குதல் நடத்தியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்து 3 அரிவாள்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 3 பேரை காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு கொண்டு சென்றனர்.

தொழிலாளியை வெட்டிய சம்பவத்தில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்த போலீசாருக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வகுப்தா பாராட்டு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்