புதுவை அமைச்சரவைக்கு கூடுதல் நிதி அதிகாரம்; மத்திய உள்துறை அனுமதி
புதுவை அமைச்சரவைக்கு கூடுதல் நிதி அதிகாரம் வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
புதுச்சேரி,
புதுவை மாநில கவர்னராக கிரண்பெடி பொறுப்பேற்றது முதல் காங்கிரஸ் அரசுக்கு பல்வேறு வகைகளில் நெருக்கடி கொடுத்து வந்தார். அரசு சார்பில் அனுப்பப்படும் கோப்புகளில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி அதனை திருப்பி அனுப்பி வந்தார்.
அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும் துறைகளுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு இருந்தாலும் அனைத்து நிதி தொடர்பான முடிவுகளுக்கும், நிதி ஒதுக்குவதற்கும் தனது அனுமதியை பெற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டு இருந்தார். இதனால் அரசு சார்பு நிறுவனங்களுக்கு மானியம், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன.
இந்த நிலையில் கடந்த 31.8.2018 அன்று மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி ஒரு கடிதம் எழுதினார். அதில், புதுவை மாநிலத்தில் தற்போது திட்டங்களுக்கான செலவினங்கள் அதிகரித்துள்ளன. எனவே முதல்–அமைச்சர், அமைச்சரவைக்கு கூடுதல் நிதி அதிகாரம் வழங்க வேண்டும்.
புதுவையில் அரசு செயலாளர்களுக்கு ரூ.2 கோடிக்கு அதிகமாகவும், நிதித்துறைக்கு ரூ.2 கோடியில் இருந்து ரூ.5 கோடி வரை, நிதித்துறை அமைச்சருக்கு ரூ.5 கோடியில் இருந்து ரூ.50 கோடி வரை, திட்டங்களை செயல்படுத்த நிதிநிலைக்குழுவிற்கு ரூ.50 கோடியில் இருந்து ரூ.100 கோடி, அமைச்சரவைக்கு ரூ.100 கோடிக்கு மேல் திட்டங்களுக்கான மொத்த செலவு என நிதியை கையாள அதிகாரம் அளிக்க வேண்டும். டெண்டர் வழங்குவதற்கும் நிதி அமைச்சர், அமைச்சரவைக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற முதல்–அமைச்சர் நாராயணசாமி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து இது தொடர்பாக விளக்கினார்.
இந்தநிலையில் தற்போது புதுவை தலைமை செயலாளர் அஸ்வனி குமாருக்கு மத்திய உள்துறையின் சார்பு செயலாளர் சஞ்சய் குமார் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ‘புதுவை முதல்–அமைச்சர் அனுப்பிய கடிதத்தை முழுமையாக பரிசீலித்தோம். மாநில அரசை சுமுகமாக நடத்த முதல்–அமைச்சர் கோரியுள்ள கூடுதல் நிதி அதிகாரம் அவசியம் தேவை என கருதுகிறோம்.
கவர்னரின் பொதுநிதி விதிகள் 13(2) கீழ் தனக்குள்ள நிதி அதிகாரங்களை துறை செயலாளர், இயக்குனர், அமைச்சரவை, நிதி அமைச்சர் என பகிர்ந்து அளிக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. அரசின் செயல்பாடுகளை விரைவுபடுத்தவும், நிர்வாகத்தை செம்மைப்படுத்தவும் நிதி அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும். அரசுக்கு கூடுதல் நிதி அதிகாரம் வேண்டும். அப்போது தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்கள் நலத்திட்டங்களை உடனடியாக மேற்கொள்ள முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையொட்டி இது தொடர்பான கோப்புகளை தயாரித்து கவர்னர் கிரண்பெடிக்கு தலைமை செயலாளர் அஸ்வனி குமார் அனுப்பி வைப்பார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை ஏற்று கவர்னர் அனுமதித்தால் புதுவையில் அமைச்சரவைக்கு கூடுதல் நிதி அதிகாரம் கிடைக்கும்.