களியக்காவிளையில் 1½ கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது
களியக்காவிளையில் 1½ கிலோ கஞ்சாவுடன் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மாணவர்களுக்கு சப்ளை செய்ய கஞ்சாவை வீட்டில் பதுக்கியது அம்பலமாகி உள்ளது.
களியக்காவிளை,
களியக்காவிளை பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யப்படுவதாக சப்-இன்ஸ்பெக்டர் மோகன அய்யருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் தலைமையிலான போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் களியக்காவிளை ஆர்.சி. தெருவில் உள்ள வீடு ஒன்றில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். பின்னர் கதவை திறந்து உள்ளே சென்றபோது, வீட்டிற்குள் இருந்து 4 பேர் திபு, திபுவென தப்பியோடினார்கள். போலீசார் அவர்களை துரத்தி சென்றனர். அவர்களில் 2 பேர் மட்டும் போலீசில் சிக்கினர். மற்ற 2 பேரும் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தப்பி விட்டனர்.
1½ கிலோ பறிமுதல்
பிடிபட்ட 2 பேரையும் களியக்காவிளை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்டவர்கள் களியக்காவிளை ஆர்.சி. தெருவை சேர்ந்த ரீகன் (வயது 30), சந்திரன் (35) என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ரீகன் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன.
போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மதுரை, தேனி போன்ற பகுதிகளில் இருந்து கஞ்சாவை பெண்கள் பஸ் மூலம் குமரி மாவட்டத்துக்கு கொண்டு வருவதாகவும், பின்னர் அந்த கஞ்சாவை சிறிய சிறிய பொட்டலங்களாக தயார் செய்து குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள மாணவர்களுக்கு சப்ளை செய்ததும் தெரிய வந்தது.
பரபரப்பு
பெண்களை கஞ்சா தொழிலில் ஈடுபடுத்தினால் போலீசாருக்கு சந்தேகம் வராது. எனவே கஞ்சா சப்ளை செய்யும் கும்பல், குமரி மாவட்டத்துக்கு கஞ்சாவை கொண்டு வர பெண்களை பயன்படுத்துகிறார்கள்.
மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பியோடிய 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். வீட்டில் பதுக்கி வைத்த 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் களியக்காவிளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.