கடற்கொள்ளையர்கள் 3-வது நாளாக தாக்குதல்: நாகை மீனவர்கள் 9 பேர் படுகாயம்

கடற்கொள்ளையர்கள் 3-வது நாளாக நடத்திய தாக்குதலில் நாகை மீனவர்கள் 9 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.;

Update: 2018-09-29 23:30 GMT
நாகப்பட்டினம்,

கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களை தாக்குவது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சிறைப்பிடித்து அழைத்து செல்வது உள்ளிட்ட செயல்களில் இலங்கை கடற்படை பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது.

இலங்கை கடற்படையின் அச்சுறுத்தல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், நாகை மாவட்ட மீனவர்களை இலங்கையை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் தாக்கி வருகிறார்கள். நாகை கடல் பகுதியில் கடற்கொள்ளையர்களின் தாக்குதல் நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து 3-வது நாளாக நடைபெற்று உள்ளது.

நாகை அருகே உள்ள நாகூர் சம்பா தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது 40). இவர் தனது படகில் நாகை ஆரியநாட்டு தெருவை சேர்ந்த பிரதாபன்(34), விஜயகுமார்(33), பாலமுருகன்(18), மணிபாலா(20), பூம்புகார் பெரிய வானகிரி கிராமத்தை சேர்ந்த கணேசமூர்த்தி(32) ஆகியோருடன் நேற்று முன்தினம் நள்ளிரவு கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வெள்ளை நிற படகில் வந்த கடல் கொள்ளையர்கள், கண்ணன் உள்பட 6 பேரையும் சரமாரியாக தாக்கினர். மேலும் மீனவர் களின் படகில் இருந்த ஜி.பி.எஸ். கருவி, பேட்டரி, டார்ச் லைட், செல்போன், மீன்பிடி வலைகளை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

இதையடுத்து மீனவர்கள் 6 பேரும் நாகை கடற்கரைக்கு வந்து சக மீனவர்களிடம் கடல் கொள்ளையர்களின் தாக்குதல் குறித்து தெரிவித்தனர்.

கடல் கொள்ளையர்கள் தாக்கியதில் கண்ணனுக்கு வலது தோள்பட்டை மூட்டு இறங்கியது. அவருடன் இருந்த 5 மீனவர்களும் படுகாயம் அடைந்தனர். பாதிக்கப்பட்ட மீனவர்களை, 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்கள் 6 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கீழையூர் அருகே உள்ள செருதூர் சிங்காரவேலர் குடியிருப்பை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மனைவி பூங்கொடி(42). இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சோந்த சுதாகர்(40), தருமன்(37), குமார்(36) ஆகிய 3 பேர் கோடியக்கரையில் இருந்து 18 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் நேற்று முன்தினம் இரவு மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

இவர்களையும் கடற்கொள்ளையர்கள் தாக்கி, ஜி.பி.எஸ். கருவி, பேட்டரி மற்றும் மீன்பிடி வலைகளை பறித்து சென்றனர். இதையடுத்து கரை திரும்பிய மீனவர்கள் 3 பேரும் உடனடியாக நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவங்கள் குறித்து கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்கள் 9 பேரையும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை, கடற்கொள்ளையர்கள் தாக்கி பொருட்களை பறித்து சென்றுள்ளனர். அதிவேக படகுகளில் வரும் கடற்கொள்ளையர்கள், தமிழ் மற்றும் சிங்களம் பேசுகிறார்கள். இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சருக்கும், மத்திய அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்திய கடற்படையினர் மூலம் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி, மீனவர்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்த தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்று அவர் கூறினார்.

பேட்டியின்போது நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், அ.தி.மு.க. நகர செயலாளர் தங்க.கதிரவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இரவு நேரத்தில் கடல் பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தும் கடற்கொள்ளையர்கள் டீ-சர்ட், பேன்ட் அணிந்து “டிப்-டாப்பாக” அதிவேக படகுகளில் வருவதாக மீனவர்கள் கூறுகிறார்கள்.

கடற்கொள்ளையர்கள் தொடர்ந்து தாக்குவதால் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதா? வேண்டாமா? என்ற குழப்பம் நாகை மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய இலங்கையை சேர்ந்த கடற்கொள்ளையர்களை பிடித்து தண்டிக்க வேண்டும் என நாகை மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


மேலும் செய்திகள்